தேர்தல் வாக்குறுதி 100க்கு 100 நிறைவேற்ற முடியாது: திருமாவளவன்

1

சென்னை: ரெட்டமலை சீனிவாசன் பிறந்த நாளையொட்டி, சென்னை ஓட்டேரி இடுகாட்டில் உள்ள அவரது நினைவிடத்தில், வி.சி., தலைவர் திருமாவளவன், நேற்று அஞ்சலி செலுத்தினார்.

பின், அவர் அளித்த பேட்டி:



பி.சி., - எஸ்.சி., - எஸ்.டி., விடுதிகளை, 'சமூக நீதி விடுதிகள்' எனப் பெயர் மாற்றம் செய்திருப்பதை வரவேற்கிறோம்.


தேர்தல் நேரத்தில் வி.சி.,க்கு எத்தனை இடங்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்கிறேன். அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி அமைந்தால் பலமாக இருக்கும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் கூறியது, அவரது சொந்த விருப்பமாக இருக்க முடியாது.



ஊடகத்தினர் கேள்வி கேட்கும்போது, சூழலுக்கு ஏற்ப அவர் பதில் சொல்லி இருப்பார். தி.மு.க., தலைமையில் உள்ள கூட்டணியில் தான், இரு கம்யூ., கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. கூட்டணி கட்டுக்கோப்பாகவும், உறுதியாகவும் இருக்கிறது. இதே கட்டுக்கோப்புடன் தான், தேர்தலை சந்திக்கப் போகிறோம்.


தேர்தல் வாக்குறுதிகளை பொறுத்தவரை, 100க்கு 100 சதவீதம் யாராலும் நிறைவேற்ற முடியாது.
தி.மு.க., அரசைப் பொறுத்தவரை, பெரும்பான்மையான வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளன. முக்கியமான சில கோரிக்கைகள் பாக்கி உள்ளன.



அதை நிறைவேற்ற வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது; மறுக்க முடியாதது.
இவற்றை முதல்வர் கவனத்திற்கு சுட்டிக்காட்டி உள்ளோம். தேர்தலுக்கு முன்பாகவே, முதல்வர் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என நம்புகிறோம்.



தி.மு.க., - அ.தி.மு.க., என்ற இரு கட்சிகளில் எப்போது ஒரு கட்சி பலவீனம் அடைகிறதோ, அப்போது அந்த கட்சி, ஆட்சி அமைக்க வேண்டியது இருந்தால், அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும்.


அ.தி.மு.க., கூட்டணி அமைக்கவே தடுமாறுவதில் இருந்து, அப்படியொரு சூழலைத்தான் பார்க்க முடிகிறது.


அ.தி.மு.க., தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே, மற்ற கட்சிகள் கூட்டணிக்கே ஒப்புக் கொள்ளும்.


இந்நிலையை, அக்கட்சியும் புரிந்து கொண்டதாகவே தெரிகிறது. கூட்டணி ஆட்சிக்கு தயார் என்ற தோற்றத்தையே, அக்கட்சி செயல்பாடுகள் வாயிலாக உணர முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement