ஏ.ஐ., இயந்திரங்கள் இடம்பெறும் திருப்பூர் 'நிட்ஷோ' கண்காட்சி

திருப்பூர் : ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் உருவான இயந்திரங்கள் அணிவகுக்கும், 'நிட்ஷோ - 2025' கண்காட்சி, திருப்பூர் பனியன் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்குமென, தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் பனியன் தொழிலானது, 'நிட்டிங், காம்பாக்டிங், பிரின்டிங், எம்ப்ராய்டரிங் என, பல்வேறு தொழிற்பிரிவுகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு பிரிவும், மதிப்பு கூட்டும் பணியை மேற்கொள்ள, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றன. அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

புதிய இயந்திரங்களை திருப்பூரிலேயே அறிமுகம் செய்யும் வகையில், 'நிட்ஷோ' கண்காட்சி ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

அதன்படி, 23வது நிட்ஷோ -2025 கண்காட்சி, ஆக., 8ல் துவங்கி, மூன்று நாட்கள் நடக்க உள்ளது. திருப்பூர் - காங்கயம் ரோடு 'டாப் லைட்' சென்டரில் விரிவான அரங்கம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

இன்றைய தொழில்கள், ஏ.ஐ., தொழில்நுட்பத்துக்கு மாறி வரும் நிலையில், அதிநவீன வசதிகளுடன் தயாராகியுள்ள இயந்திரங்கள், கண்காட்சியில் அதிக அளவில் அணிவகுக்க உள்ளன.

ஏற்றுமதி வர்த்தகத்தில் சாதகமான சூழல் நிலவும் இந்நேரத்தில் நடக்கும் கண்காட்சி, தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று இத்துறையினருக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கண்காட்சி ஆக., 8ல் துவங்கி, மூன்று நாட்கள் நடைபெற உள்ளது

Advertisement