கெம்கா கொலையில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை; பீஹார் போலீஸ் நடவடிக்கை

2

பாட்னா; பா.ஜ., பிரமுகரும், தொழிலதிபருமான கோபால் கெம்கா படுகொலையில் தொடர்புடைய நபரை பாட்னா போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.



பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கோபால் கெம்கா. பா.ஜ., பிரமுகரான இவர் பெரும் தொழிலதிபர்.கடந்த சில நாட்கள் முன்பு தமது வீட்டின் முன்பு கூலிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


பீஹாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கெம்கா கொலையில் தொடர்பு கொண்டவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மொத்தம் 12க்கும் அதிகமானவர்களை பாட்னா போலீசார் கைது செய்துள்ளனர்.


அவர்களில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை விநியோகித்த விகாஸ் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இவர், கெம்காவை சுட்டுக் கொன்ற உமேஷ் என்பவருடன் தொடர்பில் இருந்தவர்.


இந் நிலையில், பாட்னா நகரில் உள்ள மால்சலாமி பகுதியில் விகாஸ் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படையினருடன் போலீசார் அங்கு சென்றனர். அவரை கைது செய்ய சென்ற போது போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிக்க முயற்சித்துள்ளார்.


சுதாரித்துக் கொண்ட போலீசார், விகாசை துப்பாக்கியால் சுட்டு என்கவுன்ட்டர் செய்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement