மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு

சென்னை: 'அரசு மருத்துவ மனைகளில் காலியாக உள்ள செவிலியர்கள், மருந்தாளுநர்கள், லேப் டெக்னீசியன்கள் பணியிடங்களை, மாவட்ட சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேசிய நலவாழ்வு குழுமம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி., வாயிலாக, அரசுமருத்துவமனைகளில் காலியாக உள்ள, டாக்டர்கள், நர்ஸ்கள், லேப் டெக்னீசியன்கள் போன்ற பணியிடங்கள் நிரந்தரம் மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தன. அந்த நடைமுறையை மாற்றி, அந்தந்த மாவட்ட சுகாதார சங்கங்கள் வாயிலாக, 2,500 செவிலியர்கள், 1,500 மருந்தாளுநர்கள் மற்றும் லேப் டெக்னீசியன்களை நியமிக்க, தேசிய நலவாழ்வு குழுமம் உத்தரவிட்டுள்ளது.

அதன் இயக்குனர் அருண் தம்புராஜ், அனைத்து சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவ கல்லுாரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:

மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் இயக்குனரகங்களில், காலியாக உள்ள செவிலியர்கள், மருந்தாளுநர்கள், லேப் டெக்னீசியன்கள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, மே 21 மற்றும் ஜூன் 23ம் தேதிகளில் துறைசார் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில், காலியாக உள்ள பணியிடங்களை கண்டறிந்து, அவற்றை மாவட்ட சுகாதார சங்கங்கள் வாயிலாக நிரப்ப முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, தற்காலிக அடிப்படையில், 11 மாத ஒப்பந்தத்தில் பணியாளர்களை நியமிக்க வேண்டும். பணி தற்காலிகமானது என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement