அரசு கல்லுாரிகளில் 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்க அனுமதி

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர, அதிக மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளதால், கூடுதலாக 20 சதவீத இடங்களை ஒதுக்க, உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிக்கை:



தமிழக அரசு, அனைவரும் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துகிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ், திறன் மேம்பாட்டு துறை சார்பில், திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குகிறது.


இதனால், கடந்த நான்காண்டுகளில், உயர்கல்வி சேர்க்கை அதிகரித்து உள்ளது.

இந்த ஆண்டு புதிதாக, 15 கலை, அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. எனினும், ஏற்கனவே உள்ள கல்லுாரிகளில் அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.


எனவே, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், 20 சதவீதம்; அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 15 சதவீதம்; சுயநிதி கல்லுாரிகளில், 10 சதவீத இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுஉள்ளன.



கிராமப்புற, ஏழை மாணவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, உயர்கல்வியில் சேர்ந்து, நலத்திட்ட உதவிகளையும் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அமைச்சர் கூறியுள்ளார்.

Advertisement