இடுக்கியில் ஜீப் சவாரிக்கு மாவட்ட நிர்வாகம் தடை

மூணாறு: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் ஜீப் சவாரி எனும் சாகச பயணத்திற்கு தடை விதித்து, கலெக்டர் விக்னேஸ்வரி உத்தரவிட்டார்.

மாவட்டத்தில், சுற்றுலா பகுதிகளில் கரடு, முரடான பாதையில் ஜீப் சவாரி எனும் சாகச பயணம் செல்வதற்கு பயணியர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுபோன்ற பயணம் சில நேரங்களில் ஆபத்தில் முடிகிறது.

மூணாறு அருகே போதமேடு பகுதியில் ஜூலை 1ல், ஜீப் தேயிலை தோட்டத்தினுள் கவிழ்ந்து, சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த பிரகாஷ், 58, இறந்தார்; 10 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் கவனத்திற்கு சென்றது.

அதனால் சுற்றுலா பயணியரின் பாதுகாப்பை உறுதிபடுத்தி, ஜீப்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் பேரிடர் மேலாண்மை சட்டப்படி, மாவட்டத்தில் ஜீப் சவாரி எனும் சாகச பயணத்திற்கு தடை விதித்து கலெக்டர் விக்னேஸ்வரி உத்தரவிட்டார்.

அதை மீறும் டிரைவர், உரிமையாளர், நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன துறையினர் கொழுக்கு மலைக்கு செல்லும் ஜீப்களுக்கு தடை உத்தரவு பொருந்தாது என, தெரிவித்தனர்.

மூணாறில் ஜீப் சபாரிக்கு விடுக்கப்பட்ட தடை உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., ஆட்டோ மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் மறியல் நடத்தினர்.

Advertisement