மாவட்டத்தில் தலைமை ஆசிரியர் பணியிடம்... நிரப்பப்படுமா? கிராம பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு

கடலுார் : கடலுார் வருவாய் மாவட்டத்தில் துவக்க, நடுநிலைப் பள்ளியில் 200 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாக உள்ளன.
கடலுார் வருவாய் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு பகுதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் தொடக்க, மெட்ரிக், மேல்நிலைப்பள்ளிகள் என, 2224 பள்ளிகள் உள்ளன. மாவட்டத்தில், கடலுார், விருத்தாசலம் என, 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன.
ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 7 வட்டாரங்கள் உள்ளன. கடலுார் கல்வி மாவட்டத்தில் மட்டும் 576 துவக்கப் பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
கிராமப் பகுதியில் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில பள்ளியில் படிக்க வேண்டும் என்கிற தாக்கத்தால் நகரப்பகுதியில் உள்ள பள்ளியில் சேர்க்கின்றனர். இதனால், கிராமப்புற அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
கிராமப்புறங்களில் ஒரு சில பள்ளிகளில் ஊழியர்கள் இருப்பதைக்காட்டிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பல கிராமங்களில் ஆசிரியர்கள் வருகையும் கேள்விக்குறியாக உள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஆசிரியர்கள் வருகை பதிவேடு முறையாக கையாளப்பட்டது.
அதனால் வருகை பதிவும் செம்மையாக இருந்தது. ஆனால் தற்போது வருகைப்பதிவேடு முறையாக பராமரிப்பதில்லை. காரணம் அதை பராமரிக்கும் தலைமை ஆசிரியர் பணியிடம் பல பள்ளிகளில் காலியாக உள்ளன. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 4 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.
கடலுார் வட்டாரத்தில் திருமாணிக்குழி, வானமாதேவி, தொட்டி, கரைமேடு, சி.என்.பாளையம், இடையாளர்குப்பம், குமளங்குளம், வி.காட்டுப்பாளையம், கீரப்பாளையம், துாக்கணாம்பாக்கம், ஒதியடிக்குப்பம், ஜி.என்.குப்பம், தோட்டப்பட்டு ஆகிய இடங்களில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதேப் போன்று, அண்ணாகிராமம் வட்டாரத்தில் தொட்டி, சின்னபேட்டை, பாலுார், எம்.ஏரிப்பாளையம், கோழிப்பாக்கம், பனப்பாக்கம், பைத்தாம்பாடி, கட்டமுத்துப்பாளயைம், ரெட்டிக்குப்பம் ஆகிய இடங்களிலும், பண்ருட்டி வட்டாரத்தில் நத்தம், எலவத்தடி, நன்னிக்குப்பம், சொரத்துார், வி.கண்டிகுப்பம், மேலிருப்பு, குடியிருப்பு, நடுநாட்டுப்பாளையம், பெரிய பிள்ளையார்குப்பம் ஆகிய இடங்களிலும் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளன.
ஒவ்வொரு வட்டாரத்திலும் 9 முதல் 13 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பரங்கிப்பேட்டை வட்டாரங்களில் காலிப்பணியிடங்கள் கூடுதலாக உள்ளன. மொத்தத்தில் மாவட்டத்தில் 150 முதல் 200 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த பணியிடங்களை பூர்த்தி செய்தால் கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் கண்டிப்பாக உயர வாய்ப்புள்ளது.
மேலும்
-
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை முயற்சி
-
அமெரிக்கா டெக்ஸாசில் மழை வெள்ளம்; பலி எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு
-
கெம்கா கொலையில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை; பீஹார் போலீஸ் நடவடிக்கை
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு
-
தர வரிசை பட்டியலில் திருச்சி விமான நிலையம் முதலிடம்
-
இன்றைய மின் தடை