4ம் வட்டம் அளவிலான மாணவர் தின விழா போட்டிகள் துவக்கம்

புதுச்சேரி : காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி கல்வித்துறையின் 4ம் வட்டம் அளவிலான மாணவர் தினவிழா போட்டிகள் வில்லியனுார் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் நடந்தது.

போட்டிகளை முதன்மைக் கல்வி அலுவலர் குலசேகரன், பெண்கல்வி இணை இயக்குநர் ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 4ம் வட்ட பள்ளித் துணை ஆய்வாளர் திருவரசன் வரவேற்றார்.

இதில்,அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் ஆங்கிலத்தில் உரிய உச்சரிப்புடன் பிழையின்றி படித்தல், பிழையின்றி எழுதுதல் மற்றும் பொது அறிவு வினாடி -வினா போட்டிகளில் கலந்து கொண்டனர்.

கோர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் முரளி, 5ம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் புவியரசன், வில்லியனுார் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குணச்செல்வி, ஓவிய ஆசிரியர் வேலாயுதம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். உடற்கல்வி ஆசிரியர் முருகையன் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை 4ம் வட்ட அலுவலக ஆசிரியர்கள் முரளிதரன், ஏழுமலை மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வித்துறை மூலம் மாணவர் தினத்தன்று பரிசுகள் வழங்கப்படுகிறது.

Advertisement