புறாக்களுக்கு உணவளிக்கும் இடங்களை மூட மஹா., அரசு உத்தரவு

7

மும்பை: மும்பையில், 'கபூதர் கானாஸ்' எனப்படும், புறாக்களுக்கு உணவளிக்கும், 51 இடங்களை மூட மஹாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்குள்ள மும்பை, புனே உள்ளிட்ட பகுதி களில் இயற்கையாகவே புறாக்கள் அதிகம் வசிக்கின்றன.

இதனால் பூங்காக்கள், சுற்றுலா தலங்களுக்கு அருகே குவியும் நுாற்றுக்கணக்கான புறாக்களுக்கு அப்பகுதி மக்கள் உணவு வழங்குகின்றனர்.

இதனால், அப்பகுதியை சுற்றி வசிப்போருக்கு நுரையீரலை பாதிக்கும், 'ஹைப்பர்சென்சிட்டிவ் நிமோனியா' தொற்று அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது, புறாக்களுடன் தொடர்பில் இருப்பதால் ஏற்படுவதாகவும், ஏற்கனவே உடல் உபாதைகள் உள்ளவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 60- - 65 சதவீதம் அதிகம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இதையடுத்து, புறாக்களுக்கு உணவளிக்கும் இடங்களை மூட, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது, மஹாராஷ்டிர சட்டசபையிலும் எழுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து மும்பையில் உள்ள, 51 'கபூதர் கானாஸ்'களை மூட மஹாராஷ்டிர அரசு மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் புறாக்களுக்கு உணவளிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

Advertisement