17 பெண்கள் உட்பட 59 பேருக்கு தீயணைப்பு துறையில் பணியாணை

புதுச்சேரி : தீயணைப்பு துறைக்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட 17 பெண்கள் உள்ளிட்ட 59 பேருக்கு பணியாணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 58 தீயணைப்பாளர்கள் மற்றும் 12 டிரைவர் பதவிகளுக்கு நேரடி தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்வு செய்யப்பட்ட 49 (ஆண்-32; பெண் 17) தீயணைப்பாளர்கள் மற்றும் 10 டிரைவர்களுக்கு பணியாணைகளை முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார்.

தொடர்ந்து, இத்துறையில் கடந்த 10, 15 மற்றும் 25 ஆண்டுகள் பதவி உயர்வின்றி பணிபுரிந்து வந்த தீயணைப்பாளர்களுக்கு முறையே முன்னணி தீயணைப்பாளர் சிறப்பு நிலை (22 பேர்), நிலைய அதிகாரி (சிறப்பு நிலை) - 74 பேர் மற்றும் நிலைய அதிகாரி (சிறப்பு நிலை-I) 39 பேருக்கு சிறப்பு நிலை சீருடை அந்தஸ்திற்கான ஆணைகளை வழங்கினார்.

சட்டசபையில் நடந்த இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., அரசு செயலர் முத்தம்மா, சார்பு செயலர், கோட்ட மற்றும் உட்கோட்ட தீயணைப்பு அதிகாரிகள் உடனிருந்தனர்.

புதுச்சேரி தீயணைப்புத்துறையில் முதல்முறையாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து 17 பேர் தீயணைப்பாளர்களாக பணியமர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement