275 பேர் மரணத்திற்கு காரணமான ஏர் இந்தியா விபத்து: முதற்கட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

1

புதுடில்லி: ஆமதாபாத்தில் 275 பேர் உயிரிழக்கக் காரணமான ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது விரைவில் பொது வெளியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு ,242 பேருடன் கடந்த மாதம் 12ம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜீன் விமானம், 600 - 800 அடி உயரமே பறந்த நிலையில், சில நிமிடங்களிலேயே கீழே வெடித்து சிதறியது. இதில் ஒரேயொரு பயணியை தவிர, குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உட்பட 275 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவில் நடந்த மோசமான விபத்துகளில் ஒன்றான இந்தவிபத்து குறித்து, விமான விபத்து புலனாய்வு பணியகம்(Aircraft Accident Investigation Bureau (AAIB) ) விசாரணை நடத்தி வந்தது. இந்த குழுவினர், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்தி தகவல்களை சேகரித்து இருந்தனர்.

இந்நிலையில் இந்த குழுவினர் தங்களது முதற்கட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையில் என்ன இடம்பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகவிட்டாலும், விபத்துக்கான காரணம் குறித்த முக்கிய தகவல் இடம்பெற்று இருக்கலாம் என கருதப்படுகிறது. விரைவில் பொது வெளியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement