குப்பை கொட்டும் பிரச்னை: மேயரை சிறை பிடித்த மக்கள்

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் நெருப்பெரிச்சல், ஜி.என்., கார்டன் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள தனியார் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது.

இவ்வாறு கொட்டப்படும் குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது, குடியிருக்க முடியவில்லை, நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என பல புகார்களை கூறிய அப்பகுதியினர் கருப்பு கொடி கட்டியும், குப்பை லாரியை சிறைப்பிடித்தும் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும், போலீஸ் பாதுக்காப்புடன் அங்கு குப்பை கொட்டி வருகிறது.

இந்நிலையில், குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்தும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அப்பகுதி பொதுமக்கள், அனைத்து கட்சியினர், ஜி.என்., கார்டன் பஸ் ஸ்டாப் அருகில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையில், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, சிகாமணி (இந்திய கம்யூ.,), மற்றும் பொதுமக்கள் சிலர் ஆகியோருடன் மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், கமிஷனர் அமித், மண்டல தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் மாநகராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், எந்த முடிவும் எட்டப்படாததால், ஜி.என்., கார்டனில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சந்திக்க மேயர் தினேஷ்குமார் சென்றார். அங்கு சென்று மக்கள் மத்தியில் பேசிய மேயர், 'குப்பை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும். உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது. காத்திருப்பு போராட்டத்தை கைவிடுங்கள்,' என்று கூறி புறப்பட ஆயத்தமானார்.

ஆனால், பொதுமக்கள், 'நாளை முதல் குப்பை கொட்டக்கூடாது. குப்பை லாரி வராது என உத்தரவாதம் தருமாறு, 'மேயரிடம் கூறினர். அதற்கு மேயர் எந்த பதிலும் கூறாததால், மக்கள் அவரை செல்லவிடாமல், முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

''நாளை (இன்று) காலை நல்ல முடிவாக சொல்கிறேன்,'' என மேயர் சொன்னதால், பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர். அதன் பின்பு மேயர், இரவு 9:30 மணிக்கு புறப்பட்டு சென்றார்.

Advertisement