காவலாளி அஜித்குமார் மரணம், நகை திருட்டு வழக்கையும் சேர்த்து சி.பி.ஐ., விசாரணை

மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் மரணமடைந்தது தொடர்பான வழக்குடன், நகை திருட்டு வழக்கையும் சேர்த்து சி.பி.ஐ.,விசாரிக்க வேண்டும். விசாரணை அதிகாரியை சி.பி.ஐ., ஒரு வாரத்தில் நியமித்து ஆக.20 ல் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சிவகாசி வழக்கறிஞர் மாரீஸ்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:



மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் வழிபட பேராசிரியை நிகிதா காரில் வந்தார். காரிலிருந்த நகை திருடுபோனது. அவர் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். கோவில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை ஜூன் 27 ல் போலீசார் விசாரித்தனர். போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். அஜித்குமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். எய்ம்ஸ் டாக்டர்கள் குழு மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். வழக்கின் விசாரணையை சி.பி.ஐ., அல்லது சிறப்பு விசாரணைக்குழுவிற்கு மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.


திருப்புவனம் வழக்கறிஞர் கார்த்திக்ராஜா, 'சம்பவம் தொடர்பாக பதிவான வழக்கை சி.பி.சி.ஐ.டி.,போலீசாரின் விசாரணைக்கு மாற்ற வேண்டும். திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் மடப்புரம் கோவிலில் ஜூன் 27 முதல் 29 வரை பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்,' என மனு தாக்கல் செய்தார். இதுபோல் மேலும் சில மனுக்கள் தாக்கலாகின.

இது சாதாரண கொலையல்ல



ஜூலை 1 ல் விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு, 'இது சாதாரண கொலையல்ல. மாநில அரசே ஒரு குடிமகனை கொலை செய்துள்ளது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என அதிருப்தியை பதிவு செய்தது.



பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: திருப்புவனத்தில் பதட்டமான சூழ்நிலை காரணமாக திருப்புவனம் நீதித்துறை நடுவர் (ஜெ.எம்.,) விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்ய முடியவில்லை. போலீஸ் விசாரணையில் அஜித்குமார் இறந்தது குறித்து மதுரை 4வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க வேண்டும். அவரிடம் வழக்கு ஆவணங்கள், சம்பவத்தின்போது பதிவான வீடியோ பதிவுகளை சிவகங்கை எஸ்.பி.,திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ஒப்படைக்க வேண்டும். நீதிபதி ஜூலை 8 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளை பாதுகாக்க வேண்டும். காவலில் மரணம் தொடர்பாக அதற்கு பொறுப்பான சம்பந்தப்பட்ட போலீஸ் உயரதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மேல் நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் ஜூலை 8 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.



நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு நேற்று விசாரித்தது. நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தரப்பில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிக்கை தாக்கல் செய்தது.



தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான், அரசு வழக்கறிஞர்
செந்தில்குமார், பிளீடர் திலக்குமார், சி.பி.ஐ.,தரப்பு வழக்கறிஞர் முகைதீன் பாஷா, மனுதாரர்கள் தரப்பில் மாரீஸ்குமார், அருண்சுவாமிநாதன், அறிவழகன், அழகுமணி ஆஜராகினர்.



அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்து அஜ்மல்கான் கூறியதாவது: இந்நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை காணொலியில் நடப்பதை விதிகளுக்கு புறம்பாக சிலர் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனர். விவாதிக்கின்றனர். இது விசாரணையை பாதிக்கும்.



நீதிபதிகள்: இப்புகார் குறித்து வேறு சந்தர்ப்பத்தில் தனியாக தீர்வு காணலாம். போலீஸ் துன்புறுத்தலில் மரணம் நடந்துள்ளது. இவ்வழக்கிலிருந்து விலக்கிச் செல்ல வேண்டாம்.



அஜ்மல்கான்: இவ்வழக்கில் மாநில காவல்துறையின் கீழ் உள்ள சில போலீசார் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளனர். மாநில காவல்துறையே விசாரித்தால் சரியாக இருக்காது என்பதால் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது அரசிதழில் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் சகோதரருக்கு காரைக்குடி ஆவினில் வேலை, தாய்க்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

சாட்சிகளுக்கு துன்புறுத்தல்



கார்த்திக்ராஜா தரப்பு வழக்கறிஞர்: சாட்சிகள் சிலர் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். சாத்தான்குளம் போலீஸ் விசாரணையில் தந்தை, மகன் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.,போலீசார் 75 சதவீதம் விசாரித்து முடித்தபின் சி.பி.ஐ.,விசாரணையை துவக்கியது. 5 ஆண்டுகளாக விசாரணை நடக்கிறது. துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ.,7 ஆண்டுகளாக விசாரிக்கிறது. இவ்வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கூடாது. சிறப்பு விசாரணைக் குழுவிற்கு மாற்ற வேண்டும். அஜித்குமார் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.



நீதிபதிகள்: சிறப்பு விசாரணைக்குழுவிற்கு மாற்றினாலும் சில அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்களை எழுப்ப வாய்ப்புள்ளது. உள்ளூர் போலீசார் விசாரித்தால் சரியாக இருக்காது என்பதால்தான் தமிழக அரசு சி.பி.ஐ.,க்கு மாற்றியுள்ளது.



அஜ்மல்கான்: இழப்பீடு வழங்குவது குறித்து தெளிவுபடுத்த 2 வாரங்கள் அவகாசம் தேவை.



மாரீஸ்குமார்: அஜித்குமார் கொல்லப்பட்ட வழக்கு மட்டுமே சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது. நகை திருட்டு தொடர்பாக பதிவான வழக்கையும் சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்.

அஜ்மல்கான்: அவ்வாறு மாற்றத் தயார்.



நீதிபதிகள்: சி.பி.ஐ., விசாரணை அதிகாரியை ஒரு வாரத்தில் நியமிக்க வேண்டும்.



முகைதீன் பாஷா: 2 வாரங்கள் அவகாசம் தேவை. இவ்வாறு விவாதம் நடந்தது.

இரண்டு வாரங்களில் இழப்பீடு விபரம்



நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வழக்கு விசாரணை நேர்மையாக, வெளிப்படையாக நடைபெற வேண்டும். போலீசார் விசாரணையில் அஜித்குமார் இறந்துள்ளார். சம்பவம் தொடர்பான சாட்சியம், சான்று ஆவணங்கள் எதுவும் அழிக்கப்படவில்லை என்பதை நீதிபதி விசாரணையில் தெளிவுபடுத்தியுள்ளார். அவரது அறிக்கை சி.பி.ஐ.,விசாரணைக்கு பெரிதும் உதவும். 6 போலீசார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தின்போது மானாமதுரை டி.எஸ்.பி.,யாக இருந்தவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை எஸ்.பி.,யாக இருந்தவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.



பாதிக்கப்பட்டோர் தரப்பிலிருந்து இவ்வழக்கை தாக்கல் செய்யவில்லை. போலீஸ் விசாரணையில் மரணம் நடந்துள்ளதை நீதிபதி மற்றும் அரசு தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது. இதுபோன்ற சூழலில் இழப்பீடு வழங்க ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்தன. அவர் மீது ஏற்கனவே எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. அவர் 29 வயதில் கொல்லப்பட்டுள்ளார். அவரது நன்னடத்தையை கருதி இழப்பீடு வழங்குவது குறித்து அரசு தரப்பில் விபரம் பெற்று 2 வாரங்களில் தெரிவிக்க வேண்டும்.

ஒரு வாரத்தில் விசாரணை அதிகாரி நியமனம்



நகை திருட்டு வழக்கையும் சேர்த்து சி.பி.ஐ.,விசாரிக்கும் வகையில் தமிழக அரசு தனியாக அரசாணை பிறப்பிக்க வேண்டும். விசாரணை அதிகாரியை சி.பி.ஐ., இயக்குனர் ஒருவாரத்தில் நியமிக்க வேண்டும். அவர் வழக்கு தொடர்பாக நீதிபதியின் விசாரணை அறிக்கை உட்பட அனைத்து ஆவணங்களையும் உயர்நீதிமன்றக் கிளை பதிவாளரிடம் (நீதித்துறை) பெற்றுக்கொள்ள வேண்டும்.



விசாரணை அதிகாரி உடனடியாக விசாரணையை துவங்கி ஆக.20 க்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சி.பி.ஐ.,விசாரணைக்கு தேவையான ஊழியர்கள், வாகனங்கள் உள்ளிட்ட இதர உதவிகளை வழங்க மதுரை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி., மதுரை, சிவகங்கை கலெக்டர்கள், எஸ்.பி.,கள் வழங்க வேண்டும். அனைத்து சாட்சிகளுக்கும் சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.



பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அரசு ஒருவாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூலை 22 க்கு ஒத்திவைக்கப்படுகிறது
இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement