வங்கியில் கள்ள நோட்டு 'டிபாசிட்' செய்ய முயன்ற இருவர் கைது

சென்னை,தனியார் வங்கியில், 2.01 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை 'டிபாசிட்' செய்ய முயன்ற இருவரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள எச்.டி.எப்.சி., தனியார் வங்கிக்கு, நேற்று முன்தினம் வந்த ஒரு வாடிக்கையாளர், வங்கி கணக்கு ஒன்றில் 'டிபாசிட்' செய்ய சொல்லி 2.01 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார்.

இந்த பணத்தில், ஒரு 500 ரூபாய் நோட்டை தவிர மற்ற அனைத்தும் கள்ள நோட்டு என்பதை கண்டறிந்த காசாளர், இதுகுறித்து வங்கியின் மேலாளர் ஈஸ்வரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, தகவலறிந்து வந்த மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண புலனாய்வு பிரிவு போலீசார், கள்ள நோட்டுகளை டிபாசிட் செய்ய வந்த கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார், 44, என்பவரை கையும் களவுமாக பிடித்தனர்.

அவரிடமிருந்து மொத்தமாக 5.11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இவரிடம் நடத்திய விசாரணைக்கு பின், பம்மல் பகுதியைச் சேர்ந்த சாம்பிரவீன் சந்தன்ராஜ், 44, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். இருவரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கள்ள நோட்டுகள் எங்கிருந்து வந்தன, யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement