இறந்து விட்டதாக இறுதி சடங்கு செய்யப்பட்ட ரவுடி மாடு தினேஷ் துப்பாக்கி முனையில் கைது

சென்னை:இறந்து விட்டதாக கூறி, இறுதி சடங்கு முடித்து, தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா போலீசாரை ஏமாற்றிய, சென்னையை சேர்ந்த ரவுடி மாடு தினேஷ், நேற்று காட்பாடியில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார்.

இதுபற்றி, அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:



சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் மாடு தினேஷ், 39; ரவுடி. இவர் மீது, தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில், 43க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன; 2010ல், 'ஏ பிரிவு' ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டார். அந்த ஆண்டில் இவர் இறந்து விட்டதாகக் கூறி, அவரது தந்தை ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்தனர்.


தினேஷ் இறக்காத நிலையில், போலீசாரை ஏமாற்ற இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். இதை போலீசாரும் நம்பி விட்டனர்.


இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மாடு தினேஷ், தன் மனைவி மற்றும் மகளை, திருச்சி மாவட்டம் லால்குடியில் தங்க வைத்து விட்டு, செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டார். கடத்தல் தொழிலுக்காக, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கார்களை திருடி உள்ளார்.



செம்மரம் மற்றும் கஞ்சா கடத்தல் வாயிலாக, கோடி கணக்கில் சம்பாதித்த மாடு தினேஷ், சூளைமேடு பகுதியில் சொந்தமாக இரண்டு மாடியில் வீடு கட்டி உள்ளார். பல முறை மொபைல் எண்களை மாற்றிய இவர், கடைசியாக வாங்கிய மொபைல் எண் எங்களுக்கு கிடைத்தது.


அதன் டவர் லொகேஷனை ஆய்வு செய்த போது, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை, சென்னை, வேலுார் காட்பாடி, ஆந்திரா, கர்நாடகா மாநிலம் பெங்களூரு என, பல்வேறு இடங்களை காட்டியது. காரிலும், இரு சக்கர வாகனங்களிலும் சுற்றிக்கொண்டே இருந்தார். நேற்று முன்தினம், டவர் லொகேஷன், வேலுார் மாவட்டம் காட்பாடி அருகே காட்டியது.


டவர் லொகேஷன் காண்பித்த இடத்தை, நாங்கள் சுற்றி வந்தபோது, எங்களை கண்ட மாடு தினேஷ் உஷாராகி தப்பிச் செல்ல முயன்றார். உடனே அவரை துப்பாக்கி முனையில் கைது செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பெயருடன் 'மாடு' வந்த கதை



தினேஷின் தாத்தா உள்ளிட்ட அவரது மூதாதையர்கள் மாடு திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதனால், கூட்டாளிகள் அவரை மாடு தினேஷ் என்று அழைத்து உள்ளனர்.

Advertisement