களைகட்டிய பலா பழம் விற்பனை மலை விவசாயிகள் மகிழ்ச்சி

சேந்தமங்கலம், கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக மட்டுமின்றி மிளகு, அன்னாசி, பலா, வாழை, காபி உள்ளிட்ட வேளாண் பொருட்களும் அதிகளவு கிடைக்கிறது. கொல்லிமலை பலாப்பழம் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், சுவை அதிகமாக இருக்கும். இதனால், கொல்லிமலை பலாப்பழம் என்றாலே சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி செல்வர்.

கொல்லிமலை பலாப்பழம் சீசன் ஒவ்வொரு ஆண்டும், வைகாசியில் தொடங்கி ஆடி மாதம் வரை இருக்கும். இந்த மாதங்களில் பலா அறுவடை அதிகமாக இருக்கும். ஆவணி மாதம் கொல்லிமலை பலா சீசன் முடிந்து விடும். அதன் பின் பழம் கிடைக்காது. இந்தாண்டு சில வாரங்களுக்கு முன், பலா அறுவடை தொடங்கி விட்டது. செம்மேடு, சோளக்காடு, முள்ளுக்குறிச்சி மற்றும் பேளுக்குறிச்சி பகுதியில் உள்ள விவசாயிகள் பழங்களை கொண்டு வந்து விற்று வருகின்றனர்.
மலையை சுற்றியுள்ள மரங்களில் பலா பழங்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. மேலும் கொல்லிமலை மற்றும் அடிவாரம் என அனைத்துப் பகுதிகளிலும் ரூ.50 முதல், 350 வரை பெரிய, சிறிய அளவிலான பழங்களை வியாபாரிகள் விற்பனை செய்து
வருகின்றனர்.
நாமக்கல், சேலம் மாவட்ட பழ வியாபாரிகள் கொல்லிமலை பலா பழங்களை மொத்தமாக கொள்முதல் செய்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டை விட, இந்தாண்டு பலா பழங்களின் விளைச்சல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன்
கூறுகின்றனர்.

Advertisement