ராமதாஸ் முன்னிலையில் அன்புமணி மீது நிர்வாகிகள் சரமாரி குற்றச்சாட்டு

திண்டிவனம்: 'பா.ம.க.,விற்கு ராமதாஸ் தான் தலைவர். வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. நீக்கும் அதிகாரம் ராமதாசிற்கு மட்டும் தான் உள்ளது' என்று திண்டிவனம் அருகே ஓமந்துாரில் நடந்த பா.ம.க.,மாநில செயற்குழு கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி பேசினார்.
பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவராக செயல்பட்டு வந்த அன்புமணியின் பதவியை அதிரடியாக பறித்து, அவரை கட்சியின் செயல் தலைவராக கட்சியின் நிறுவனரான ராமதாஸ் நியமித்தார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, தந்தை-மகன் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து உச்சகட்டத்தை எட்டியது.
இதன் தொடர்ச்சியாக ராமதாஸ், பா.ம.க.,வில் தனக்கு வேண்டியவர்களை மாநில, மாவட்ட நிர்வாகிகளாக நியமித்தார். இதற்கு பதிலாக அன்புமணியும் தனக்கு வேண்டியவர்களை கட்சியில் நிர்வாகிகளாக நியமித்து அதிரடி காண்பித்தார்.
இந்த சூழ்நிலையில், நிர்வாகக்குழுவில் இடம் பெற்றிருந்த அன்புமணியை, ராமதாஸ் கடந்த, 5ம் தேதி அதிரடியாக நீக்கிவிட்டார்.
இந்த சூழ்நிலையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஓமந்துாரில் நேற்று காலை 11:00 மணிக்க பா.ம.க.,மாநில செயற்குழு கூட்டம், நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது.
இதில் கட்சியின் கவுரவு தலைவர் ஜி.கே.மணி, அருள் எம்.எல்.ஏ., வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செயற்குழு கூட்டத்தில் முதன்முதலாக ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி கலந்து கொாண்டார்.
கூட்டம் துவங்கிய உடன் குறிப்பிட்ட நிர்வாகிகள் மட்டும் பேசுவதற்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் பேசும் போது, ' பா.ம.க.,வையும், வன்னியர் சங்கத்தையும், கட்சி சின்னத்தையும் உருவாக்கியவர் ராமதாஸ். அவருக்கு தான் அனைத்து அதிகாரமும் இருக்கிறது. அன்புமணி கிருஷ்ணகிரிக்கு நடைபயணம் வரும் போது, அவருக்கு கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிப்போம்.
ராமதாசை எதிர்ப்பவர்கள் கடைசியில் அசிங்கப்பட்டு நிற்பார்கள். அவர் யாரை கைகாட்டுகிறாரோ அவரை மட்டுமே நாங்கள் ஏற்போம். அவர் நாளை யாரை தலைவராக அடையாளம் காட்டுகிறாரோ அவர் தான் அடுத்த தலைவராக முடியும்.
ராமதாசிற்கு கரு நாக்கு
ராமதாசின் நெருங்கிய நண்பரான சுப்ரமணிய அய்யர், சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையவில்லை எனும் பாடலையும், நீங்க நல்லா இருக்கணும், நாடு முன்னேற எனும் பாடலையும், ராமதாசை நோக்கி பாடிய போது, கூட்டம் ஆர்ப்பரித்தது.
தொடர்ந்து அவர் பேசும் போது, 'யாராக இருந்தாலும், அப்பாவிற்கு அடங்கி தான் நடக்க வேண்டும். பெற்றோரை மதிக்கவில்லை எனில், அவர்களின் சாபத்திற்கு ஆளாக வேண்டும். ராமதாஸ் நாக்கு கருநாக்கு. அவரின் சாபத்தை வாங்கிக்கொள்ளாதீர்கள். அவர் யாரை கைகாட்டுகிறாரோ அவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்,' என்றார்.
தொடர்ந்து வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி பேசும் போது,' பா.ம.க.,விற்கு ராமதாஸ்தான் தலைவர். வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. நீக்கும் அதிகாரம் ராமதாசிற்கு மட்டும்தான் உள்ளது. இதை
தான் பா.ம.க.,வின் சட்ட விதிமுறைகள் சொல்கின்றன. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அவர் பின்னே தான் அனைவரும் வருவார்கள்,' என்றார்.
சேலம் எம்.எல்.ஏ.,அருள் பேசும் போது,' ராமதாஸ் சுயம்புவாக உருவானவர். அவரை யார் மறந்தாலும் அவர்கள் அழிந்துவிடுவார்கள். என்னை கட்சியை விட்டு நீக்குவதற்கு அவருக்கு தான் அதிகாரம் உள்ளது,' என்றார்.
@block_B@
பா.ம.க.,செயற்குழு கூட்டத்தில், மேடைக்கு எதிரிலுள்ள நாற்காலியில் , ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி, பெண்களுடன் அமர்ந்திருந்தார். இதைப்பார்த்த பார்த்த ராமதாஸ் அவரை மேடையில் வந்து அமர சொன்னார். இதையடுத்து ராமதாஸின் பின் இருக்கையில் அவர் உட்கார்ந்து கொண்டார். ஆனால் அவரது மகன் முகுந்தன், இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.block_B
@block_B@
பா.ம.க.,வில் ராமதாசிற்கும், அன்புமணிக்கும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், கட்சியிலுள்ள நிர்வாகிகள் அடிக்கும் போஸ்டர்களில் அன்புமணி படம் இடம் பெற்றிருக்கும். ஆனால் நேற்று நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் படம் பிரதானமாக இடம் பெற்றிருந்தது. அன்புமணி படம் புறக்கணிப்பட்டிருந்தது. ஏற்கனவே தைலாபுரம் தோட்டத்தின் முகப்பில் இருந்த அன்புமணி படம் சமீபத்தில் அகற்றப்பட்ட நிலையில், தற்போது, செயற்குழு கூட்ட பேனரிலும் அன்புமணி படம் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. block_B
@block_B@
செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு சுடச்சுட மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. தொண்டர்கள் ரசித்து ருசித்து சாப்பிட்டனர்.block_B
மேலும்
-
இன்று குரு பவுர்ணமி கொண்டாட்டம் வேதம் படிக்கும் மாணவர்கள் கவுரவிப்பு
-
தலைமை செயலர் பற்றி அவதுாறு பா.ஜ., ரவிகுமாருக்கு முன்ஜாமின்
-
மடாதிபதிகள் அரசியல் பேசக்கூடாது!
-
உணவு தேடி வந்து பள்ளத்தில் விழுந்த புலி குட்டி மீட்பு
-
பரவலாக பெய்யும் மழை குறைந்தது மின் தேவை
-
தலைமை மாற்றம் குறித்து விவாதம்? காங்., மேலிட பொறுப்பாளர் மறுப்பு!