கனரக லாரிகளால் மின்கம்பங்கள் சேதம் சிறைபிடித்து புட்லுார் மக்கள் போராட்டம்

திருவள்ளூர்:கனரக லாரியால் மின்கம்பங்கள் சேதமடைந்ததால், லாரிகளை சிறைபிடித்து, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் அடுத்த புட்லுாரிலிருந்து, அரண்வாயல் செல்லும் சாலை, 3 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. நெமிலி அகரம் அரசு குவாரியில் மண் ஏற்றிக் கொண்டு, புட்லுார் - -அரண்வாயல் சாலை வழியாக, தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வருகின்றன. இதனால், சாலை சேதமடைந்துள்ளது.

நேற்று மதியம் காக்களூர் தொழிற்பேட்டைக்கு வந்த கன்டெய்னர் லாரி, சாலையோர மின்கம்பங்களுக்கு இடையே உள்ள மின்கம்பிகளில் சிக்கிக் கொண்டது. இதனால், மூன்று மின்கம்பங்கள் சேதமடைந்து, அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், அவ்வழியாக வந்த அனைத்து லாரிகளையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

செவ்வாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். அதன்பின், அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement