குஜராத்தில் பாலம் இடிந்ததில் 10 பேர் பலி: ஆற்றில் விழுந்த லாரி, கார்கள்

23


ஆனந்த்: குஜராத்தில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்ததில் 10 பேர் பலியாகி உள்ளனர். பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்கிறது.


இதுபற்றிய விவரம் வருமாறு;


குஜராத்தில் மாநில நெடுஞ்சாலையில் கம்பீரா என்ற பாலம் பயன்பாட்டில் உள்ளது. மாஹிசாகர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள இந்த பாலத்தின் மீது தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இந்த பாலம் இணைக்கிறது.


இந்நிலையில் கம்பீரா பாலம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. பாலத்தின் ஒரு பகுதி அப்படியே ஆற்றில் விழ, அப்போது வந்து கொண்டிருந்த 2 லாரிகள், 2 வேன்கள் உள்பட 6 வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்தன.


விபத்தில் முதல்கட்டமாக 3 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தகவலறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.


இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., கவுரவ் ஜசானி கூறியதாவது; ஆனந்த், வதோதராவை இணைக்கும் இந்த பாலத்தின் ஒரு பகுதி முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது. ஆற்றில் பல வாகனங்கள் விழுந்திருக்கலாம் என்று தெரிகிறது.


இவ்வாறு அவர் கூறினார்.


43 ஆண்டுகள் பழமையான இந்த பாலம், கடந்தாண்டு தான் பழுது பார்க்கப்பட்டது. கண்டெய்னர் லாரி, வேன் என மொத்தம் 6 வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Advertisement