தொழிற்சங்கத்தினர் அறிவித்த பாரத் பந்த்: கேரளா, மேற்கு வங்கத்தில் பாதிப்பு; மற்ற மாநிலங்களில் பாதிப்பில்லை

புதுடில்லி; மத்திய தொழிற்சங்கத்தினர் அறிவித்த பாரத் பாரத் காரணமாக, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் பாதிப்பில்லை. வங்கி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் பணிகள் முடங்கின.
நாடு முழுவதும் 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கத்தினர் இன்று (ஜூலை 9) ஒருநாள் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர். தொழிற்சங்க அமைப்புகள் வலுவாக இருக்கும் வங்கி, தபால் அலுவலகம், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. மற்ற பொதுத்துறை நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் குறைவான ஊழியர்களே பணிக்கு வந்திருந்தனர்.
பா.ஜ., ஆட்சி செய்யும் மாநிலங்களில் பந்த் காரணமாக பாதிப்பு எதுவும் இல்லை. அரசு ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மட்டுமே வெவ்வேறு இடங்களில் நடந்தன.
தமிழகம்
பந்த் காரணமாக, தமிழகத்தில் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணிகள் பாதிக்கப்பட்டாலும், பொதுப்போக்குவரத்து வழக்கம் போல் இயங்கியது. கடைகள், வணிக வளாகங்கள் எப்போதும் போல் திறந்திருந்தன. ஆட்டோ, டாக்சிகள் இயக்கப்பட்டன. ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. மாநில அரசு அலுவலகங்கள் குறைந்த ஊழியர்களுடன் செயல்பட்டன. முக்கிய நகரங்களில் தொழிற்சங்கத்தினர் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர்.
பயணிகள் அவதி
பந்த் காரணமாக, மேற்கு வங்க மாநிலத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். கோல்கட்டாவில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. துர்காபூர், ஜாதவ்புர், முர்ஷிதாபாத், பாரக்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் தண்டவாளங்களில் மறியலில் ஈடுபட்டனர்.
தள்ளுமுள்ளு
எனினும் ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வரவேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தி இருந்ததால், அரசு அலுவலகங்கள் குறைந்த ஊழியர்களுடன் செயல்பட்டன. இடதுசாரி தொழிற்சங்கத்தினரும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் போலீசாருக்கும், அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பேரணி
ஒடிசாவில் தலைநகர் புவனேஸ்வரில் தேசிய நெடுஞ்சாலையில் தொழிற் சங்கத்தினர் போராட்டத்தில் குதித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டவாறே பேரணி சென்றனர். இயல்பு நிலையில் பாதிப்பு எதுவும் இல்லை.
கேரளா முடங்கியது
கேரளாவில் முக்கிய நகரங்களில் கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன. இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. குறைந்த அளவு எண்ணிக்கையிலான அரசு பஸ்களே இயக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து ஊர்வலம் நடத்தினர்.
கர்நாடகா
காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் கர்நாடகாவில், பந்த் முற்றிலும் பிசுபிசுத்தது. பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் அரசு பஸ், ஆட்டோ, வாகனங்கள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கின. இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை. இடதுசாரி தொழிற்சங்கத்தினர் முக்கிய நகரங்களில் ஊர்வலம் நடத்தினர்.
என்ன கோரிக்கை
தொழிலாளர்களை பாதிக்கும் கொள்கைகளை கைவிட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், கான்ட்ராக்ட் முறை ஒழிக்கப்பட வேண்டும், குறைந்தபட்ச சம்பளம் ரூ.26 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.
ஆதரவு
திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கம், காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி., இடதுசாரி கட்சிகளின் தொழிற்சங்கத்தினர் ஆதரவுடன் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. விவசாயிகள் அமைப்புகள், பொதுத்துறை நிறுவன தொழிலாளர் சங்கங்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
வங்கி ஊழியர்கள்
வர்த்தக நகரமான மும்பையில் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கி ஊழியர்கள் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். பொது போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை.
லாரிகள் நிறுத்தம்
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சுரங்கத் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட பேரணி சென்றனர். தெலுங்கானாவில் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் காரணமாக, ஹைதராபாத் நகருக்கு வெளியே ஏராளமான கண்டெய்னர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
கேரளா செல்லும் பஸ்கள் நிறுத்தம்
இடது முன்னணி ஆட்சி செய்யும் கேரளாவில் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு இருக்கும் என்பதால் கன்னியாகுமரி, கோவையில் இருந்து அந்த மாநிலத்துக்கு பஸ்கள் இயக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுச்சேரியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. சில தனியார் பள்ளிகள் விடுமுறையை அறிவித்துள்ளன. சில பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன.
