மாநகராட்சி மண்டல தலைவர்கள் ராஜினாமா: ஏற்றுக்கொண்டார் மதுரை மேயர்!

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் வாசுகி, சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, வரி விதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி, நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன் ஆகிய ஏழு பேர் ராஜினாமாவை மேயர் இந்திராணி ஏற்றுக்கொண்டார்.
மதுரை மாநகராட்சியில் ரூ.பல கோடி வரி முறைகேடு புகாரில் சிக்கிய மண்டல தலைவர்கள் குறித்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இம்முறைகேடு புகார் குறித்து மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் நேரு தலைமையில் நடந்த விசாரணையில் மண்டலத் தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி (மண்டலம் 2), பாண்டிச்செல்வி (மண்டலம் 3), முகேஷ் சர்மா (மண்டலம் 4), சுவிதா (மண்டலம் 5) ஆகிய 4 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதுபோல் நகரமைப்பு குழுத்தலைவர் மூவேந்திரன், வரி விதிப்புக் குழுத்தலைவர் விஜயலட்சுமி பங்கேற்றனர். இவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின் அவர்களிடம் 'சூழ்நிலை காரணமாக ராஜினாமா செய்வதாக' தனித்தனியாக கடிதம் பெறப்பட்டது.
இவர்களின் ராஜினாமா கடிதங்களில் மேயர், கமிஷனர் கையெழுத்திட வேண்டும் என்பதற்காக மேயர் இந்திராணியை கடைசியாக அழைத்துள்ளனர். அவரிடமும் விசாரணை நடத்திய நிலையில் ராஜினாமா கடிதங்களில் கையெழுத்து பெறப்பட்டது. இவ்விசாரணைக்கு வந்த மண்டலம் 1ன் தலைவர் வாசுகியை திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதால் அவரும் சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெளியான முதல்வர் ஸ்டாலின் அறிக்கையில், 'மதுரை மாநகராட்சியில் அனைத்து மண்டலத் தலைவர்களும் ராஜினாமா செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக' தெரிவிக்கப்பட்டது. இதனால் ராஜினாமா கடிதம் அளிக்காத மண்டல தலைவர் வாசுகியும் ராஜினாமா பட்டியலில் உள்ளாரா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது: நான்கு மண்டல தலைவர்கள், 2 நிலைக் குழு தலைவர்களிடம் மட்டும் அமைச்சர் நேரு கடிதம் பெற்றார். அந்த கடிதங்களில் மேயரின் கையெழுத்து பெற்ற நிலையில் அவற்றில் கமிஷனரின் கையெழுத்து பெறப்பட்டதா அல்லது மண்டல தலைவர்களை மிரட்டும் வகையிலான ராஜினாமா கடிதங்களை பெற்று வைத்துக்கொள்ளும் உத்தியை கட்சித் தலைமை கையாண்டுள்ளதா எனத் தெரியவில்லை.
அதேநேரம் அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என செய்தி குறிப்பும் வெளியாகியுள்ளது. ஆனால் முதல்வரின் அந்த உத்தரவை சுட்டிக்காட்டி மண்டலம், நிலைக் குழுத் தலைவர்களுக்கு மாநகராட்சி தரப்பில் இருந்து நேற்று எவ்வித எழுத்துப்பூர்வ தகவலும் அளிக்கப்படவில்லை. மண்டலத் தலைவர்கள் ராஜினாமா விவகாரம் இதுவரை குழப்பமாக உள்ளது என்றனர்.
@block_P@
மாநகராட்சி மண்டல தலைவர்கள் வாசுகி, சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, வரி விதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி, நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன் ஆகிய ஏழு பேர் ராஜினாமாவை மேயர் இந்திராணி ஏற்றுக்கொண்டார்.block_P




