அய்யலுார் கோயில் எறிகாசு ஏலத்திற்கு நீதிமன்றம் தடை
வடமதுரை: அய்யலுார் வண்டிகருப்பண சுவாமி கோயில் எறிகாசு சேகரிக்கும் ஏலத்திற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கடைசி நேரத்தில் தெரிவித்ததால் ஏலம் எடுக்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
திண்டுக்கல் திருச்சி நான்குவழிச்சாலையில் அய்யலுார் அருகே வாகனங்களின் பயணிப்போர் வண்டிகருப்பணசுவாமி கோயிலுக்கு காணிக்கையாக எறியும் காசுகள், சிதறு தேங்காய் சேகரிக்க, வாகனங்கள் பாதுகாப்பு வரி வசூல் செய்ய ஹிந்துசமய அறநிலைய துறை ஆண்டுதோறும் ஏலம் விடுகிறது.
இந்தாண்டிற்கான ஏலத்தை வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் உதவி ஆணையர் லட்சுமிமாலா, ஆய்வாளர் சுரேஷ்குமார், செயல் அலுவலர் முத்துலட்சுமி நடத்தினர். ஏலத்தில் பங்கேற்க பலரும் டெபாசிட் செலுத்த வங்கி டி.டி.,களுடன் வந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாக கூறி எறிகாசு ஏலம் மட்டும் நீக்கப்பட்டது.
அதிருப்தியான ஏலதாரர்கள் மற்ற இரு வகை ஏலத்தையும் புறக்கணித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் கோயில் நலனுக்கு எதிராக செயல்படும் அறங்காவலரை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என செயல் அலுவலரிடம் மனு வழங்கி கலைந்து சென்றனர்.