பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு: கண்டுக்காவிடில் காத்திருக்கு ஆபத்து

திண்டுக்கல் மாவட்டத்தில் அபரிமிதமான பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
பெய்யும் மழை நீர் நிலத்திற்குள் இறங்குவதை தடுத்து நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கிறது.
மழை நீர் வடிகால், ஆறு, ஓடை, கால்வாய் என நீர் நிலைகளில் மலைபோல் குவிந்துள்ளதால் நீர் நிலைகளை பாதிக்கிறது.
இதனை குப்பையுடன் எரிப்பதால் காற்று மாசு அதிகரிக்கிறது.
நிலம், நீர், காற்று என சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் 2019 முதல் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
மேலும் குப்பைகள் தனித்து தரம் பிரித்தும் வழங்கப்படுவதும் இல்லை. இதனால் பிளாஸ்டிக் கழிவுகளின் தேக்கம் அதிகரித்து வருகிறது.
இருப்பினும் சிறிய பெட்டிக்கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை பிளாஸ்டிக் பைகள் பல்வேறு வடிவங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
மண்ணில் மக்கி மண் வளத்தையும் அது சார்ந்த விளைபொருட்களை கூட நஞ்சாக மாற்றும் பேராபத்து இதனால் ஏற்படுகிறது. குப்பையோடு குப்பையாக மண்ணில் கொட்டப்படும் பாலிதீன், மண்ணில் மக்காமல் மண்ணை நசாமாக்கி கொண்டிருக்கிறது.
குப்பையை கிளறி பாலிதீன் பைகளோடு கலந்திருக்கும் உணவு மிச்சங்களை உண்ணும் கால்நடைகளின் வயிற்றில் பாலிதீன் பை தேங்கி அவற்றின் உயிரை காவு வாங்குவதும் ஆங்காங்கே நடக்கின்றன.
முறையான கண்காணிப்பு இல்லாததால் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அதிகளவு தடை பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கடைகளிலும், தடை, அபராதம் குறித்து கண்டு கொள்ளாமல் அதிகளவு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களிடமும் பயன்பாடு அதிகரித்துள்ளது.