பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு; டாக்டர், எஸ்.ஐ., குறித்து 'திடுக்' தகவல்

3

பெங்களூரு: பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக, கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட மனநல டாக்டர் , பயங்கரவாதியின் தாய் மற்றும் எஸ்.ஐ., ஆகிய மூன்று பேரை ஆறு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க, என்.ஐ.ஏ.,வுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


கர்நாடகா மாநிலம் பெங்களூரில், 2008ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி நசீர் கைது செய்யப்பட்டார்.


அவருக்கு உதவியதாக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையின் எஸ்.ஐ., ஷான் பாஷா, சிறையின் மனநல டாக்டர் நாகராஜ், தேடப்பட்டு வரும் பயங்கரவாதி ஜுனைத் அகமதுவின் தாய் அனீஸ் பாத்திமா ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.



பெங்களூரு என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். என்.ஐ.ஏ., வக்கீல் பிரசன்னகுமார், மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டார். இதை ஏற்று, நீதிபதி கங்காதர், வரும் 14ம் தேதி வரை, ஆறு நாட்கள் விசாரிக்க அனுமதி கொடுத்தார்.

மூவரிடமும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று நடத்திய விசாரணையில், பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:



நசீருக்கு மட்டுமன்றி சிறையில் உள்ள பிரபல ரவுடிகளுக்கும், மனநல டாக்டர் நாகராஜ் மொபைல் போன் விற்றுள்ளார். கடையில், 10,000 ரூபாய்க்கு வாங்கி, கைதிகளுக்கு 50,000 ரூபாய்க்கு விற்றுள்ளார். பயங்கரவாதி நசீருக்கு மட்டும் இரண்டு மொபைல் போன்கள் வாங்கி கொடுத்துள்ளார்.


அந்த மொபைல் போனை பயன்படுத்தி, சிறையில் இருந்தபடியே, பயங்கரவாதி ஜுனைத் அகமது, அவரது தாய் அனீஸ் பாத்திமாவிடம் பேசிய நசீர், பயங்கரவாத நடவடிக்கைக்கு பணம் திரட்டுவதற்கான வழிகளை கூறி உள்ளார்.



நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லும்போது, நசீரிடம் பணம் வாங்கிக் கொண்டு, பயங்கரவாத நடவடிக்கைக்கு ஆதரவாக இருந்ததால், ஷான் பாஷாவும் சிக்கி உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நிலையில், நசீர் பயன்படுத்திய மொபைல் போன் சிம், பெங்களூரு கோரமங்களாவில் உள்ள ஷோரூமில் வாங்கப்பட்டது என்றும், அந்த சிம்மை விநியோகம் செய்தது, விற்பனை பிரதிநிதியான கோலாரின் சதீஷ் கவுடா என்பதும், என்.ஐ.ஏ.,க்கு தெரிந்தது. அவரிடம் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Advertisement