பரவலாக பெய்யும் மழை குறைந்தது மின் தேவை
பெங்களூரு: கர்நாடகாவில் பரவலாக மழை பெய்வதால், மின்நுகர்வு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மின் தேவை 19,000 மெகாவாட்டில் இருந்து, 11,223 மெகாவாட்டாக குறைந்ததால், மின்துறை அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
பிப்ரவரி முதல், மே மாதம் வரை கர்நாடாகவில் கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது. பல்வேறு மாவட்டங்களில் வெப்ப நிலை, 45 டிகிரி செல்ஷியஸை தாண்டியது. கோடை ஆரம்பத்திலேயே வெப்பநிலை அதிகமாக இருந்தது.
வெப்பத்தை சமாளிக்க மக்கள், தினம் 24 மணி நேரமும் மின் விசிறி, 'ஏசி' பயன்படுத்தினர். 'கிரஹ ஜோதி' திட்டத்தில், 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டதால், பொது மக்கள் கட்டுப்பாடு இன்றி, மின்சாரத்தை பயன்படுத்தினர். இதன் விளைவாக மின் தேவை 19,000 மெகாவாட்டை எட்டியது.
மற்றொரு பக்கம் பயிர்களை காப்பாற்ற, விவசாயிகள் பம்ப்செட் மூலம் தண்ணீர் பாய்ச்சியதாலும், மின் தேவை அதிகமானது. தேவைக்கு தகுந்தபடி, மின்சாரம் வழங்க முடியாமல் மின்துறை திணறியது. பற்றாக்குறையை சமாளிக்க மின் துறை, வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கி, சூழ்நிலையை சமாளித்தது.
பஞ்சாபில் இருந்து தினமும் 200 முதல் 531 மெகாவாட், உத்தரபிரதேசத்தில் இருந்து, 100 முதல் 1,400 மெகாவாட் உட்பட பல்வேறு இடங்களில் மின்சாரம் வாங்கப்பட்டது.
ஜூன் துவக்கம் முதல், நல்ல மழை பெய்வதால் வெப்ப நிலை குறைய துவங்கியது. மழை சூழ்நிலையை குளிர்ச்சியாக்கியுள்ளது. வீடுகளில் மின் விசிறி, 'ஏசி' பயன்பாடும் குறைந்துள்ளது. பரவலாக மழை பெய்வதால், விவசாய பம்ப்செட்களை அவ்வளவாக பயன்படுத்துவதில்லை. இதற்கு முன்பு அன்றாட மின் தேவை, 19,000 மெகாவாட்டாக இருந்தது. தற்போது 11,223 ஆக குறைந்துள்ளது.
மின்சாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கர்நாடகாவில் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தும், 38 லட்சம் பம்ப்செட்டுகள் உள்ளன. உற்பத்தியாகும் மின்சாரத்தில் 36 சதவீதம், விவசாய பம்ப்செட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளை விட, விவசாய பம்ப்செட்களுக்கு மிக அதிகமான மின்சாரம் பயன்படுத்தபடுகிறது.
கோடையில் விவசாய பம்ப்செட்டுகள், ஓய்வின்றி செயல்பட்டன. இப்போது மழை பெய்வதால், பம்ப்செட்களுக்கு வேலை இல்லை. மின் தேவையும் 11,223 மெகாவாட்டாக குறைந்துள்ளது. மழை இதே போன்று நீடித்தால், மின் தேவை மேலும் குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
உள்ளாட்சியில் நல்லாட்சியா? குடும்ப ஆட்சியின் கோர காட்சியா? இ.பி.எஸ்., கேள்வி
-
மனைவியை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள்
-
சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு
-
1998ம் ஆண்டு கோவை தொடர் குண்டு வெடிப்பு; முக்கிய குற்றவாளி 28 ஆண்டுக்கு பிறகு கைது
-
ஆன்லைன் மோசடி; 71 பேர் கைது
-
நேர்மை கட்டணம்: அமெரிக்க விசா செலவு உயரும்