சமூக விரோதிகளை களையெடுக்க ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்படுமா?

பல்லடம்; தொழிலாளர் போர்வையில் தங்கியுள்ள சமூக விரோதிகளை களையெடுக்க, தனியார் நிறுவனங்களில், ஆதார் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருப்பூரில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களிலும் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. இதனால், உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், இதனை ஈடு செய்ய, வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்படுகின்றனர். தனியார் மேன் பவர் நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள் உதவியுடன், தொழிலாளர்கள் வேலைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இவ்வாறு, வடமாநிலங்களில் இருந்து வேலைக்கு வரும் தொழிலாளர்கள் போர்வையில் சில சமூகவிரோதிகளும் நுழைந்து விடுகின்றனர்.

வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் பலரும், போலி ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி, தொழிலாளர் போர்வையில் தனியார் நிறுவனங்களுக்குள் நுழைந்து விடுகின்றனர். போலி ஆதார் அட்டைகளை வைத்துக்கொண்டு, அதன் வாயிலாக, பல்வேறு ஆவணங்களையும் பெற்று நிரந்தரமாக இங்கு குடியேறுகின்றனர். இது போன்றவர்களை அடையாளம் காண்பது என்பது மிகவும் சிரமமாகும். மேலும், இதுபோன்ற தொழிலாளர்களுக்கு, போலி ஆதார் அட்டைகளை உருவாக்கிக் கொடுக்க பல ஏஜெண்டுகளும் மறைமுகமாக வேலை பார்க்கின்றனர்.

இவ்வாறு, வங்கதேசத்தினர், நைஜீரியர்கள் உள்ளிட்டோர் சட்டவிரோதமாக நுழைந்து, முறைகேடாக ஆதார் உள்ளிட்ட ஆவணங்களையும் பயன்படுத்திக் கொண்டு, இந்திய குடிமகன்களை போன்றே இங்கு வாழ்கின்றனர். கடந்த சில மாதங்களில், திருப்பூர் பல்லடம் பகுதிகளில் மட்டும், நூற்றுக்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாவட்டத்தில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்களில், குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் போலீசார் தவித்தனர். தொழிலாளர் போர்வையில், சமூக விரோதிகளும் பதுங்கி இருப்பதால், போலீசாரால் குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. குற்ற சம்பவங்களை தடுக்கவும், சட்ட விரோதமாக பதுங்கி உள்ளவர்களை கண்டறியவும், ஆதார் அட்டைகளை சரி பார்க்க வேண்டியது அவசியம்.

உண்மையான தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி, ஒவ்வொரு தனியார் நிறுவனங்களிலும், சிறப்பு ஆதார் பரிசோதனை முகாம் நடத்துவதன் மூலம், போலி ஆதார் அட்டைகளை கண் டறிந்து, சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்களை கைது செய்யவும் முடியும்.

இனி வரும் காலங்களில், தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கும் நிறுவனங்கள், கட்டாயம், அவர்களது ஆதார் உள்ளிட்ட உண்மையான ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே பணியமர்த்துவதை உறுதி செய்ய வேண்டும்.

இதற்கான, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை மேற்கொள்ள வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.

Advertisement