தமிழகத்தில் கூட்டணி ஆட்சி; தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெறும்: அமித்ஷா திட்டவட்டம்

19

புதுடில்லி: ''தமிழகத்தில் நிச்சயம் தே.ஜ, கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ஆட்சி அமையும்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



இது குறித்து, ஆங்கில நாளிதழுக்கு அமித்ஷா அளித்த பேட்டி: அனைத்து துறைகளிலும் பா.ஜ., அரசு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.பீஹார், மேற்குவங்கம் மற்றும் தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக இருக்கும். கேரளாவிலும் நல்ல வாய்ப்புகள் உள்ளன.
நாட்டின் விவசாய பட்ஜெட் 2014ல் சுமார் ரூ.22,000 கோடியாக இருந்தது, இன்று அது ரூ.1.37 லட்சம் கோடியாக உள்ளது.

14 கோடி குடும்பங்கள்



கடந்த 10 ஆண்டுகளில், 60 கோடி ஏழை மக்களுக்கு வீட்டுவசதி, சமையல் எரிவாயு, மின்சாரம், குடிநீர், இலவச ரேஷன் பொருட்கள், ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சேவை ஆகியவற்றை நாங்கள் வழங்கியுள்ளோம். அதாவது 14 கோடி குடும்பங்கள் அடிப்படை கஷ்டங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. 75 ஆண்டுகளில் எந்த அரசாங்கமும் செய்ய முடியாத ஒன்று.

ஊழல், குடும்ப சண்டைகள்



நாங்கள் அனைத்து இந்திய மொழிகளையும் மதிக்கிறோம். ஸ்டாலினுக்கு நான் சொல்ல வேண்டியது இதுதான். தமிழில் மருத்துவம் கற்றுக்கொடுங்கள். ஏன் நீங்கள் செய்யக்கூடாது? தமிழில் பொறியியல் கற்றுக்கொடுங்கள். ஏன் நீங்கள் அதைச் செய்யக்கூடாது?
நான் மக்களின் மனநிலையைப் பற்றிப் பேசுகிறேன். தமிழக மக்கள் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, உறவினர்களுக்குச் சலுகை அளித்தல் மற்றும் குடும்பச் சண்டைகள் ஆகியவற்றால் சலித்துப் போயுள்ளனர்.

நிச்சயம் வெற்றி



தி.முக ஆட்சியில் பரவலான ஊழல். அது மிக நீண்ட பட்டியல். ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
@quote@பீஹாரில் பெரிய பிரச்னை எதுவும் இல்லை. தே.ஜ., கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். 2026ம் ஆண்டுக்குள் நக்சல் இயக்கம் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.quote

3 தாக்குதல்கள்



ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீவிரம் மற்றும் உணர்திறன் ஆகியவற்றைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும். எங்கள் காலத்தில், மூன்று பெரிய சம்பவங்கள் நடந்தன. உரி, புல்வாமா மற்றும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஆகும். நாங்கள் தகுந்த முறையில் பதிலளித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வியும், பதிலும்!



கேள்வி: தமிழகத்தில் உங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், அமைச்சரவையில் இடம்பெறுவீர்களா?

அமித்ஷா பதில்: YES (ஆம்).


கேள்வி: கூட்டணியில் விஜய் வர வாய்ப்பு உள்ளதா?


அமித்ஷா பதில்: நாங்கள் பல கட்சிகளை ஒரே கூட்டணியில் கொண்டு வர முயற்சிக்கிறோம்.


கேள்வி: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


அமித்ஷா பதில்: நாங்கள் அமோக வெற்றி பெறுவோம்.



கேள்வி: தமிழகம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்னை என்ன?

உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில்: தி.மு.க., ஆட்சியில் நடக்கும் மாபெரும் ஊழல்கள். அந்த பட்டியல், பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வெகு நீளமானது.

* மதுபான ஊழல் 39,775 கோடி ரூபாய்
* மணல் ஊழல் 5,800 கோடி ரூபாய்
* எரிசக்தி ஊழல் 4,400 கோடி ரூபாய்
* எல்காட் ஊழல் 3,000 கோடி ரூபாய்
* டிரான்ஸ்போர்ட் ஊழல் 2,000 கோடி ரூபாய்
* டி.என்.எம்.எஸ்.சி., ஊழல் 600 கோடி ரூபாய்
* ஊட்டச்சத்து ஊழல் 450 கோடி ரூபாய்
* இலவச வேட்டி ஊழல் 60 கோடி ரூபாய்

இவை தவிர, வேலைக்கு பணம், 100 நாள் வேலை திட்ட ஊழல் ஆகியவையும் உண்டு.



கேள்வி; பா.ஜ., தேசிய தலைவர் தேர்தல் எப்பொழுது நடக்கும்?


அமித்ஷா பதில்: விரைவில் நடக்கும். இன்னும் முடிவு செய்யப்படவில்லை. யாருடைய பெயரும் பரிசீலிக்கப்படவில்லை. விரைவில் இறுதி செய்யப்படும்.


கேள்வி: பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., இடையே வேறுபாடு உள்ளதா?

அமித்ஷா பதில்:
இல்லை. அவை அனைத்தும் பத்திரிகையாளர்களின் கற்பனை கதைகள்.




கேள்வி: தொகுதி மறுவரையறை குறித்து பலரிடம் பயம் உள்ளதே?




அமித்ஷா பதில்: தென் மாநிலங்களின் கவலைகள் குறித்து உரிய தீர்வு காணப்படும் என்று ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்து உள்ளேன் . யாருக்கும் எந்த அநீதியும் இழைக்கப்படாது. தொகுதி மறுவரையறை ஆணைய சட்டம் இனிமேல் தான் கொண்டு வரப்பட உள்ளது.

பார்லி.,யில் விவாதம்



அப்படி இருக்கையில் ஏன் அதை பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள். ஏனெனில், தமிழகத்தில் தேர்தல் வர போகிறது. அந்த அரசியல் காரணமாகவே பேசுகிறார்கள். தொகுதி மறுவரையறை சட்டம் கொண்டு வருவதற்கு முன், பார்லிமென்டில் விவாதம் நடத்தப்படும்.

Advertisement