ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டும்; பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கடிதம்

2

புதுடில்லி: ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.


கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நர்ஸ் நிமிஷா பிரியா, 38. இவர் மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். அங்கு தன்னுடன் பங்குதாரராக இருந்த ஏமன் நாட்டவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.


அவருக்கு அந்நாட்டு கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது. அவருக்கு வரும் 16ல் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், அதனை தடுத்து நிறுத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.


இந்நிலையில், ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வேணுகோபால் கூறியிருப்பதாவது:


நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நீதியை கேலி செய்வதாகும். அந்நிய மண்ணில் கற்பனை செய்ய முடியாத கொடுமை மற்றும் உள்நாட்டு துஷ்பிரயோகத்திற்கு ஆளான அவர், மரணத்தின் விளிம்பிற்கு தள்ளப்படுகிறார். அவரது மரணதண்டனையைத் தடுக்க அவசர தலையீடு கோரி பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement