திருமலா பால் நிறுவன அதிகாரியை போலீசார் மிரட்டவில்லை: சென்னை போலீஸ் கமிஷனர்

சென்னை: '' திருமலா பால் நிறுவன அதிகாரி நவீனை போலீசார் மிரட்டியதாக எந்த ஆதாரமும் இல்லை. இமெயிலிலும் அவர் அப்படி குறிப்பிடவில்லை,'' என சென்னை போலீஸ் கமிஷனர் அருண் கூறியுள்ளார்.


'திருமலா பால்' நிறுவனத்தில், 45 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட, கருவூல மேலாளர் நவீன் பொலினேனி தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக கொளத்துார் துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.




இந்நிலையில், இன்று நிருபர்களை சந்தித்த சென்னை போலீஸ் கமிஷனர் அருண் கூறியதாவது:நவீன் தற்கொலை தொடர்பாக விசாரணை நடக்கிறது. இதுவரை நடந்த விசாரணையில், அறிவியல்பூர்வமாக பார்க்கும் போது, அவர் தற்கொலை செய்தது போன்று தான் தெரிகிறது. அதனை விசாரித்து வருகிறோம். மேற்கு மண்டல இணை கமிஷனர் திசா மித்தல் விசாரணை நடத்துகிறார். போலீஸ் துணை கமிஷனர், நவீனை அழைத்து விசாரித்தாரா என விசாரணை நடக்கிறது. இதுவரை அதுபோன்ற தகவல் ஏதும் இல்லை.


ரூ.1 கோடி வரை நடந்த மோசடி தொடர்பாக போலீசார் விசாரிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சிவில் விவகாரம், நிதி, நிலம் தொடர்பான பிரச்னைகள் வந்தால், என்னிடம் அனுமதி பெற்று தான் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தேன். ஆனால், நடைமுறை சிக்கல்கள் இருந்ததால், இணை கமிஷனர் உத்தரவுப்படி விசாரிக்கலாம் எனக்கூறியுள்ளேன். ரூ.1 கோடிக்கு குறைவாக இருந்தாலும், இணை கமிஷனர் உத்தரவுப்படி தான் அனுமதி பெற்று விசாரிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பான மனுவில் மோசடி ரூ.40 கோடி என குறிப்பிட்டு இருந்ததால், மத்திய குற்றப்பிரிவில் (சிசிபி) புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதனை மீறி துணை கமிஷனர் விசாரித்து இருக்கக்கூடாது. அது துறைரீதியான தவறு. இதனால், துறை ரீதியில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.


தற்கொலை செய்யும்போது, தப்பிவிடக்கூடாது என்பதற்காக கைகளை கட்டிக் கொள்வார்கள். நவீன் உடலை பார்க்கும்போது தற்கொலை போலவே தெரிகிறது. அந்த இடத்தில் சிமென்ட் மூட்டைகள் உள்ளன.


சி.சி.பி.,யில் புகார் வந்தாலும், உடனடியாக வழக்குப்பதிவு செய்ய மாட்டோம். நிதி சார்ந்த விஷயம் என்பதால், ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் தான் வழக்குப்பதிவு செய்வோம்.


தற்கொலை செய்த நவீனை, பாண்டியராஜன் போனிலோ, நேரடியாகவோ மிரட்டியதாக ஆதாரம் இல்லை. அப்படி யாரும் சொல்லவில்லை. நவீன் எழுதிய இமெயிலிலும் ' போலீசார் தன்னை மிரட்டினார் ' எனக்கூறவில்லை. பாண்டியராஜனுக்கு விடுமுறை அளித்தது நான் தான். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement