தங்கம் வென்றார் அஸ்வின் * இந்தியன் ஓபன் தடகளத்தில்...

புனே: இந்தியன் ஓபன் தடகளத்தின் 8வது சீசன் மகாராஷ்டிராவின் புனேயில் நடந்தது. ஆண்களுக்கான 400 மீ., தடை ஓட்டத்தில் ('சி' பிரிவு) தமிழகத்தின் அஸ்வின் கிருஷ்ணன் பங்கேற்றார். பந்தய துாரத்தை 51.47 வினாடி நேரத்தில் கடந்த அஸ்வின், தங்கம் கைப்பற்றினார். ஆண்கள் 110 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் ஹரிஹரன், 14.34 வினாடி நேரத்தில் வந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார்.
400 மீ., ஓட்டத்தில் தமிழக வீரர்கள் சந்தோஷ் குமார் (46.84 வினாடி), சுராஜ் (46.84) என இருவரும் வெள்ளி, வெண்கலம் வசப்படுத்தினர். பெண்கள் 400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் திவ்யா (1 நிமிடம், 03.23 வினாடி) நான்காவது இடம் பெற்றார். 'பி' பிரிவு, 400 மீ., ஓட்டத்தில் மகாராஷ்டிராவின் ஐஸ்வர்யா (54.25), ரிலையன்ஸ் வீராங்கனை சோனியா (54.61), கர்நாடகாவின் பூவம்மா (55.23) முதல் 3 இடம் பிடித்தனர்.
ஸ்ரீசங்கர் அபாரம்
ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் ஜே.எஸ்.டபிள்யு., நிறுவனத்தின் சார்பில் பங்கேற்றார் முரளி ஸ்ரீசங்கர். இவர், 8.05 மீ., துாரம் தாண்டி தங்கம் கைப்பற்றினார். 2025ல் 8 மீ., துாரத்திற்கும் மேல் தாண்டிய முதல் இந்தியர் ஆனார் முரளி ஸ்ரீசங்கர்.

Advertisement