சதம் விளாசினார் லோகேஷ் ராகுல் * இந்திய அணி பதிலடி

லார்ட்ஸ்: லார்ட்ஸ் டெஸ்டில் அசத்திய ராகுல் சதம் விளாசினார். ரிஷாப் அரைசதம் அடித்தார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன் - சச்சின் டிராபி') பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
மூன்றாவது டெஸ்ட் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 387 ரன் எடுத்தது. 2வது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 145/3 ரன் எடுத்து, 242 ரன் பின் தங்கி இருந்தது. ராகுல் (53), ரிஷாப் (19) அவுட்டாகாமல் இருந்தனர்.
'ரன் அவுட்' தேவையா
நேற்று மூன்றாவது நாள் ஆட்டத்தை, இந்திய வீரர் புஜாரா, மணி அடித்து துவக்கி வைத்தார். ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் ரிஷாப். அடுத்து, ஸ்டோக்ஸ் பந்தில் சிக்சர் அடித்த ரிஷாப், அரைசதம் கடந்தார். கார்ஸ் ஓவரில் (54 வது) 'ஹாட்ரிக்' பவுண்டரி விளாசினார் ராகுல். மறுபக்கம் ரிஷாப் கைவிரலில் வலி அதிகரிக்க, சிகிச்சை எடுத்துக் கொண்டு பேட்டிங்கை தொடர்ந்தார்.
நான்காவது விக்கெட்டுக்கு 141 ரன் சேர்த்த போது, ரிஷாப் (74) தேவையற்ற முறையில் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓட, ஸ்டோக்சின் துல்லிய 'த்ரோவில்' ரன் அவுட்டானார்.
நிதான ஆட்டம்
உணவு இடைவேளைக்குப் பின் ராகுல், சதம் எட்டினார். இவர் 100 ரன்னில், சோயப் பந்தில் அவுட்டானார். ஜடேஜா, நிதிஷ் குமார் இணைந்து 72 ரன் சேர்க்க, இந்திய அணியின் ஸ்கோர் 300 ரன்களை எட்டியது. இந்நிலையில் நிதிஷ் (30) அவுட்டானார். அரைசதம் அடித்த ஜடேஜா, 72 ரன்னில் வெளியேறினார்.
ஆகாஷ் (7), பும்ரா (0) ஏமாற்ற, கடைசியில் வாஷிங்டன் (23) அவுட்டானார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ஸ்கோர் சமன் ஆனது. இங்கிலாந்து சார்பில் வோக்ஸ் 3, ஆர்ச்சர் 2, ஸ்டோக்ஸ் 2 விக்கெட் சாய்த்தனர்.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, மூன்றாவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 2 ரன் எடுத்திருந்தது. கிராவ்லே (2), டக்கெட் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
முதன் முறை
டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக ஒரு தொடரில், தொடர்ந்து மூன்று அரைசதம் அடித்தார் ஜடேஜா. இவர் பர்மிங்காமில் 89, 69, நேற்று லார்ட்சில் 72 ரன் எடுத்துள்ளார்.
முதலிடம்
அன்னிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர் அடித்த அணி வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்தது. இங்கிலாந்து தொடரில் இதுவரை 34 சிக்சர் அடித்தது இந்தியா. முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் 32 (எதிர்-இந்தியா, 1974-75), நியூசிலாந்து 32 சிக்சர் (எதிர்-பாக்., 2014) அடித்து இருந்தன.
தோனியை தொட்டார்
இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்டில் அதிக அரைசதம் அடித்த அன்னிய விக்கெட் கீப்பர் வரிசையில், இந்தியாவின் தோனியுடன் (23 இன்னிங்ஸ்) இணைந்து முதலிடத்தை பகிர்ந்து கொண்டார் ரிஷாப் பன்ட் (22 இன்னிங்ஸ்). இருவரும் தலா 8 அரைசதம் விளாசினர்.
88 சிக்சர்
டெஸ்டில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர்களில் ரோகித்துடன் (67 போட்டியில் 88 சிக்சர்) இணைந்து இரண்டாவது இடம் பெற்றார் ரிஷாப். இவர், 46 டெஸ்டில் 88 சிக்சர் அடித்துள்ளார். முதல் இடத்தில் சேவக் (103 போட்டி, 90 சிக்சர்) உள்ளார். தோனி (78), ஜடேஜா (72), சச்சின் (69), கபில் தேவ் (61) அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
* இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்டில் அதிக சிக்சர் அடித்த வீரர்களில் ரிச்சர்ட்சை (34, வெ.இண்டீஸ்) முந்தி, முதலிடம் பெற்றார் ரிஷாப் (36)
* டெஸ்ட் அரங்கில் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் அதிக சிக்சர் அடித்த வீரர்களில் இங்கிலாந்தின் ஸ்டோக்சிற்கு (39, எதிர்-ஆஸி.,) அடுத்து உள்ளார் ரிஷாப் (36, இங்கிலாந்து).
416 ரன்
இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்த அன்னிய விக்கெட் கீப்பர் ஆனார் ரிஷாப் (416). முன்னதாக 2022ல் டாம் பிளண்டெல் (நியூசி.,) 383 ரன் எடுத்து இருந்தார்.
ஒரு டெஸ்ட் தொடரில் இரு அணியின் விக்கெட் கீப்பர்களும் 400 ரன்னுக்கும் மேல் எடுத்தது முதன் முறையாக நடந்தது. இந்தியா, இங்கிலாந்து தொடரில் முதல் 3 டெஸ்டில் ரிஷாப் 416, ஸ்மித் 407 ரன் எடுத்துள்ளனர். ஒரு தொடரில் அதிக ரன் எடுத்த விக்கெட் கீப்பராக தென் ஆப்ரிக்காவின் டெனிஸ் லிண்ட்சே (606 ரன், 1966-67, எதிர்-ஆஸி.,) உள்ளார்.
இரண்டாவது இந்தியர்
லார்ட்சில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதம் அடித்த இரண்டாவது இந்தியர் ஆனார் ராகுல். 2021ல் 129, இம்முறை 100 ரன் எடுத்தார். முன்னதாக இந்தியாவின் வெங்சர்க்கார், இங்கு 3 முறை (1979, 1982, 1986) சதம் அடித்துள்ளார்.
லார்ட்சில் ஒன்றுக்கும் மேல் சதம் அடித்த அன்னிய துவக்க வீரர்களில், ராகுல் (2) நான்காவது இடம் பிடித்தார். முன்னதாக பில் பிரவுன் (2, ஆஸி.,), கிரீனிட்ஜ் (2, வெ.இண்டீஸ்), ஸ்மித் (2, தெ.ஆப்.,), தலா 2 சதம் அடித்தனர்.
* 2008க்குப் பின் டெஸ்டில் அதிக சதம் அடித்த வீரர்களில் ராகுல் (4) முதலிடம் பிடித்தார். இங்கிலாந்து வீரர்கள் டக்கெட் (3), பர்ன்ஸ் (2), கிராவ்லே (2) அடுத்து உள்ளனர்.
'ஷூ' தானம்
லார்ட்ஸ் டெஸ்ட் முதல் இன்னிங்சில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, 5 விக்கெட் சாய்த்தார். அப்போது அணிந்திருந்த 'ஷூக்களை' லார்ட்ஸ் மைதானத்தில் அமைந்துள்ள மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப்பிற்கு, தானமாக வழங்கினார்.
மேலும்
-
செஞ்சி கோட்டையில் சுற்றுலா கட்டமைப்பு
-
பானி பூரி விற்றிருப்பார் த.வெ.க., விஜய்
-
ரூ.35 கோடி மதிப்பிலான சீன பட்டாசுகள் பறிமுதல்
-
வங்கி முன்னாள் மேலாளர் 71 வயதில் சி.ஏ., தேர்ச்சி
-
'நம்பர் ஒன்' முதல்வர் என்ற கனவுலகில் வாழும் ஸ்டாலின்:நயினார் நாகேந்திரன் விமர்சனம்
-
மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுங்கள்; நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்