'நம்பர் ஒன்' முதல்வர் என்ற கனவுலகில் வாழும் ஸ்டாலின்:நயினார் நாகேந்திரன் விமர்சனம்

சென்னை : 'உலகிலேயே, 'நம்பர் ஒன்' முதல்வர் என்ற கனவுலகில், முதல்வர் ஸ்டாலின் வாழ்கிறார்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

அவரது அறிக்கை:



தமிழக அரசு சார்பில், 2026ம் ஆண்டு பொங்கலுக்கு வழங்க இருக்கும், இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணையில், கடந்த ஆண்டை விட, 76 லட்சம் சேலைகள், 48 லட்சம் வேட்டிகள் குறைக்கப்பட்டுள்ள செய்தி, அதிர்ச்சி அளிக்கிறது.


இதனால், 26,300 விசைத்தறிகளுக்கு மட்டுமே வேலை இருக்கும்; ஒரு லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள், வேலையிழக்கும், இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.



ஏற்கனவே, நுால் கொள்முதலில் ஊழல், மானிய தொகையில் கமிஷன், வேட்டி, சேலை வழங்குவதில் முறைகேடு என, தி.மு.க., அரசின் நிர்வாக குளறுபடிகளால் நெசவாளர்கள் அல்லல்படுகின்றனர்.


இதுபோதாதென்று, ஒவ்வொரு ஆண்டும் இலவச வேட்டி, சேலை உற்பத்தியை குறைத்து வருவது ஏன்? ஆளும் அரசை எதிர்த்து, ஏழை மக்கள், என்ன செய்துவிட முடியும் என்ற இளக்காரமா?


உலகிலேயே, 'நம்பர் ஒன்' முதல்வர் என்ற கனவுலகில் வாழும் முதல்வர் ஸ்டாலின், வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும், நெசவாளர்களின் நலனில் அக்கறை செலுத்த தவறியதன் விளைவு என்ன என்பதை, வரும் சட்டசபை தேர்தலில் புரிந்து கொள்வார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement