சாத்துார் அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு
சாத்துார்: சாத்துார் காளியம்மன், மாரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்துார் முக்குராந்தலில் ஹிந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள காளியம்மன் ,மாரியம்மன் கோயில்கள் நுாறு ஆண்டுகள் பழமையான கோயில்களாகும். பங்குனி மாதம் இரு கோயில்களிலும் பொங்கல் விழா அதி விமர்சியாக நடைபெற்று வருகிறது. நுாறு ஆண்டுகள் பழமையான காளியம்மன் மாரியம்மன் கோயில்கள் கற்களாலும் கோபுரம் சுதை சிற்பங்களால் ஆனவை.
இரு கோயில்களும் பழமையான கோயில்களாக இருந்த போதும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. ஆண்டு தோறும் பொங்கல் திருவிழா மட்டும் நடைபெற்று வருகிறது. கோயில் கோபுரங்களில் உள்ள சுதை சிற்பங்கள் சேதமடைந்து பொலிவிழந்தும் காணப்படுகிறது.இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த மன வேதனை அடைந்து வருகின்றனர். கோயில் சிற்பங்களை புனரமைப்பதோடு ஆகம விதிப்படி இரு கோயில்களிலும் கும்பாபிஷேகம் செய்திட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.