பேராசிரியர் பாலியல் சீண்டல் கல்லுாரி மாணவி தீக்குளிப்பு

புவனேஸ்வர்:ஒடிஷாவின் பாலசோரில் பஹீர் மோகன் கல்லுாரி உள்ளது. இங்கு பி.எட்., படித்து வந்த மாணவியை, பேராசிரியரும் துறை தலைவருமான சமீர் குமார் சாஹூ என்பவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.

மேலும் தன் ஆசைக்கு இணங்காவிட்டால், தேர்வில் பெயில் ஆக்கி எதிர்காலத்தை சிதைத்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சிஅடைந்த அந்த மாணவி இது குறித்து கல்லுாரி புகார் குழுவில் கடந்த 1ம் தேதி மனு அளித்தார்.

அவர்கள் ஒரு வாரத்தில் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து நேற்று அந்த மாணவியும் சில மாணவர்களும் கல்லுாரி நுழைவாயில் முன் பேராசிரியருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென எழுந்த அந்த மாணவி கல்லுாரி முதல்வர் அறையை நோக்கி பெட்ரோல் கேனுடன் சென்றார். திடீரென தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். அவரை காப்பாற்ற சென்ற மாணவரும் தீக்காயம் அடைந்தார்.

இது தொடர்பான புகாரில் பேராசிரியர் சமீர் குமார் சாஹூ மற்றும் முதல்வர் திலீப் கோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

படுகாயம் அடைந்த மாணவி மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

Advertisement