குகையில் 2 மகள்களுடன் தங்கியிருந்த ரஷ்ய பெண் மீட்பு

உத்தர கன்னடா: கர்நாடகா வனப்பகுதியில் உள்ள குகையில் தங்கியிருந்த ரஷ்ய பெண், அவரின் இரு பெண் குழந்தைகளையும் போலீசார் மீட்டு, பெண்கள் பாதுகாப்பு மையத்தில் சேர்த்தனர்.
உத்தர கன்னடா மாவட்டம், கோகர்ணா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த 9ம் தேதி கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, வனப்பகுதியின் ராமதீர்த்த மலை பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மலையின் சரிவான பகுதியில் உள்ள குகை ஒன்றின் முன்புறம், துணிகள் காய வைக்கப்பட்டிருந்தன. போலீசார், அங்கு சென்று பார்த்தபோது, குகைக்குள் ஒரு பெண், இரு குழந்தைகள் இருந்தனர்.
அவர்கள், ரஷ்யாவை சேர்ந்த நீனா குடியா, 40, அவரது இரட்டை மகள்கள் பிரேயா, 4, ஆமா, 4, என தெரியவந்தது. வர்த்தக விசாவில் 2016ல் இந்தியாவுக்கு வந்த நீனா குடியா, கோவாவில் தங்கினார். பின், ஹிந்து மதம், ஆன்மிகத்தால் ஈர்க்கப்பட்டு கோகர்ணாவுக்கு வந்துள்ளார்.
இங்குள்ள வனப்பகுதியில் இரண்டு வாரமாக தங்கி உள்ளார். அவரை நகரில் வந்து தங்கும்படி போலீசார் கூறினர். அவர் முதலில் மறுத்தார்.
'தொடர் மழையால், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, குகையில் இருந்து வெளியே வர வேண்டும்' என்று போலீசார் கூறினர். இதை அவர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, மூவரும் மாவட்ட மகளிர், குழந்தைகள் நலத்துறைக்கு சொந்தமான விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
உத்தர கன்னடா எஸ்.பி., நாராயணா நேற்று அளித்த பேட்டி:
இவர்களது விசா காலம் 2017 ஏப்ரலில் முடிந்துவிட்டது. இது தொடர்பாக, பெங்களூரில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளோம். ரஷ்ய துாதரகத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. விரைவில் அவர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
டிரைவருக்கு மாரடைப்பு; அரசு பஸ் தாறுமாறாக சென்றதில் ஒருவர் பலி
-
4 பேருக்கு நியமன எம்.பி., பதவி: அறிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
-
ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி; ஷேக் ஹசீனா மகளை விடுப்பில் அனுப்பியது உலக சுகாதார நிறுவனம்
-
நீதிமன்ற பெயரை தவறாக பயன்படுத்திய பெண் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை
-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அ.தி.மு.க., பற்றி நான் இழிவாக பேசவில்லை: வைகோ
-
புது கட்சி துவக்குகிறார் அன்புமணி?