வால்பாறையில் உலாவிய புலி தோட்டத் தொழிலாளர்கள் அச்சம்

வால்பாறை:வால்பாறை தேயிலை எஸ்டேட்டில், பகல் நேரத்தில் சுற்றித்திரிந்த புலியை கண்டு தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.

கோவை மாவட்டம், வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் சமீப காலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகளவில் உள்ளது.

கடந்த மாதம், வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, தாயின் கண் முன்னே சிறுத்தை கவ்வி சென்று கடித்து கொன்றது. இதை தொடர்ந்து, வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தனர்.

இந்நிலையில், வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், புதுத்தோட்டம், கவர்க்கல், ரொட்டிக்கடை, வாட்டர்பால்ஸ், அட்டகட்டி பகுதியில் புலி நடமாட்டம் இருந்தது.

தற்போது, ஸ்டேன்மோர், சவராங்காடு எஸ்டேட் மருந்து வழங்கும் கட்டடத்தின் பின்பக்கம் உள்ள தேயிலை எஸ்டேட்டில், நேற்று மாலை, புலி சுற்றி திரிவதை, அந்த வழியாக சென்ற தொழிலாளர்கள் கண்டனர். அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிறுத்தையை தொடர்ந்து புலியும் சுற்றுவதால், தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement