தாடி வைத்த புகைப்படத்தால் சந்தேகம் குரூப் - 4 தேர்வு எழுத வந்த நபர் தவிப்பு

இடைப்பாடி,:'ஹால் டிக்கெட்'டில் தாடி வைத்த புகைப்படமும், ஆதார் அட்டையில் தாடி இல்லாத படமும் இருந்ததால், சம்பந்தப்பட்ட வாலிபர், குரூப் - 4 தேர்வு எழுத, மைய பொறுப்பாளர் அனுமதி மறுத்தார். நீண்ட விசாரணைக்கு பின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் - 4 தேர்வு நேற்று நடத்தப்பட்டது. சேலம் மாவட்டம், இடைப்பாடி, இருப்பாளியை சேர்ந்த மணிகண்டன், 27, அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, கொங்கணாபுரம் கே.ஏ., நாச்சியப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்துக்கு சென்றார்.

அப்போது, அவரது ஆதார் அட்டையில் இருந்த புகைப்படத்தில் தாடி இல்லாமல் இருந்தது. ஆனால், 'ஹால் டிக்கெட்'டில் இருந்த புகைப்படத்தில் தாடி இருந்தது. சந்தேகமடைந்த, மைய பொறுப்பாளர், அவரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. தொடர்ந்து இடைப்பாடி தாசில்தாருக்கு தகவல் கொடுத்தார்.

சேலம் மாவட்ட உதவி கலெக்டர் கவுசல்யா, இடைப்பாடி தாசில்தார் வைத்தியலிங்கம் மையத்தில் வந்து விசாரித்தனர். அதில், ஆதார் அட்டையில் உள்ளவரும், 'ஹால் டிக்கெட்'டில் உள்ளவரும் ஒருவரே என, தெரியவந்தது. இதனால், 40 நிமிடம் தாமதமாக, தேர்வு எழுத, உதவி கலெக்டர் அனுமதி அளித்தார். அதற்கேற்ப, 40 நிமிடங்கள் கூடுதலாக அனுமதி அளிக்கப்பட்டு, அவர் தேர்வு எழுதினார்.

கெங்கவல்லி, ஆத்துார் மையங்களில், காலை, 9:00 மணிக்கு மேல், தேர்வு மைய நுழைவாயில் பூட்டப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால், 9:10 மணிக்கு மேல் வந்த, 10க்கும் மேற்பட்டோரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.

@block_B@

தாமதமாக வந்தவர்களுக்கு மறுப்பு

வேலுார் மாவட்டத்தில் தாமதமாக வந்த, 11 பேரை தேர்வெழுத அனுமதிக்காததால், ஏமாற்றத்துடன் திரும்பினர். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி, இஸ்லாமிய மகளிர் கல்லுாரி மற்றும் இஸ்லாமிய ஆண்கள் கலைக்கல்லுாரி மையத்தில், தேர்வு எழுத வந்த மாணவர்கள், வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே கேட் வழியாக கடந்து வந்தபோது, ரயில்வே கேட் மூடப்பட்டதால், சில நிமிடங்கள் தாமதமாக, 50க்கும் மேற்பட்டோர் தேர்வு மையம் சென்றனர். அவர்களை தேர்வெழுத மையத்திற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.கடலுார் மாவட்டத்தில், சில தேர்வர்களின் ஹால் டிக்கெட்டில் தனியார் பள்ளியின் பெயரை குறிப்பிட்டு, அது கடலுாரின் எந்த பகுதி என குறிப்பிடப்படாமல் இருந்ததால், தேர்வர்கள் அதே பெயரிலுள்ள மற்றொரு பள்ளிக்கு சென்று தங்கள் அறையை தேடினர். அங்கு இல்லாததால் அதிகாரிகளின் அறிவுரைப்படி, மற்றொரு பகுதியில் இருந்த தேர்வு மையத்திற்கு அவதியுடன் சென்றனர்.block_B

Advertisement