காங்கயம் அரசு ஐ.டி.ஐ., - மாணவர் சேர்க்கை தீவிரம் 

காங்கயம் : காங்கயத்தில் புதியதாக துவங்கப்பட்டுள்ள ஐ.டி.ஐ.,க்கு மாணவர் சேர்க்கை துவங்கி நடந்து வருகிறது.

தகுதியானவர்கள் விண்ணப்பித்து, தொழிற்படிப்பில் இணைந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் ஜெயலட்சுமி அறிக்கை:

காங்கயத்தில், ஜூன் 23ம் தேதி முதல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ.,) புதியதாக துவங்கப்பட்டுள்ளது. அட்வான்ஸ்டு சி.என்.சி., மெஷினிங் டெக்னீஷியன், மேனுபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன், இன்டீரியர் டிசைன் அண்ட் டெக்கரேஷன், ஆடை தயாரித்தல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளது. 2025 - 2026ம் கல்வியாண்டு வகுப்புகள் துவங்க ஏதுவாக, காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரடி சேர்க்கை துவங்கி நடந்து வருகிறது.

புதிய மாணவர் பதிவு, விண்ணப்பம், அட்மிஷன் நடைமுறைகளும் காலை முதல் மாலை வரை நடக்கிறது. நுாற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளதால், இவ்வாய்ப்பினை தகுதியான மாணவ, மாணவியர் பயன்படுத்தி கொள்ளலாம். அரசு ஐ.டி.ஐ., நிலையத்தில் சேர வயது வரம்பு ஆண்களுக்கு, 14 - 40 வயது வரை; பெண்களுக்கு உச்ச வரம்பு இல்லை. கல்விக் கட்டணம் இலவசம். 750 ரூபாய் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.

தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்துக்கு தகுதியாகும் பயிற்சியாளர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், வரைபட கருவி, பஸ்பாஸ், சீருடை, காலணியும் வழங்கப்படும். படிப்பு முடியும் போது, மாவட்டத்தில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும்.

மார்க் சீட், டி.சி., ஜாதிச்சான்று, ஆதார் கார்டு மற்றும் இரண்டு போட்டோவுடன் வர வேண்டும். விபரங்களுக்கு, 95977 80910, 95002 33407 ஆகிய உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement