இது உங்கள் இடம்

புதிய வரலாறு படைக்கலாமே!
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, தி.மு.க., தலைமையிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு கிடைத்த வரவேற்பு, இன்னும் கலக்கம்அடைய செய்துள்ளது.
அதனால், அந்த இணைப்பை துண்டிக்க பல உள்குத்து வேலைகளை அரங்கேற்றி வருகிறது. அவ்வகையில், அமித் ஷா கூறிய, 'கூட்டணி ஆட்சி' என்ற வார்த்தையை பிடித்துக் கொண்டு, தங்கள் ஆதரவு தொலைக்காட்சிகளில் தினமும் விவாதித்து, விரிசலை ஏற்படுத்த முயன்று வருகின்றனர்.
அ.தி.மு.க., - -பா.ஜ., இரு கட்சிகளுக்குமே தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே நோக்கம் எனும் போது, சின்னச் சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தாமல், இணைந்து செயல்பட்டால் தான் தி.மு.க.,வை தோற்கடிக்க முடியும். தேர்தலில் வென்ற பின் மற்றவைகளை அப்போதைய சூழ்நிலைக்கேற்ப பேசி முடிவு செய்யலாம்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடந்த வரலாறு கிடையாது என்கின்றனர் சிலர்... ஏன் புதிய வரலாறு படைக்கக் கூடாது?
அதேபோன்று, பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகளை, தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் செல்லவிடாமல் தடுக்க, அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது, தி.மு.க.,!
அது எந்த அளவுக்கு வெற்றியை தரும் என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்து விடும்.
இந்நிலையில், முதல் முறையாக தேர்தல் களம் காணவிருக்கும் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், 'சினிமா ரசிகர்கள் அனைவரும் நமக்கு ஓட்டுப் போடுவர். நாமே அடுத்த முதல்வர்' என்று நினைத்து தனித்து நின்றால், அது அவருக்கு வெற்றியை தராது. மாறாக, தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை சிதறடித்து, அக்கட்சியின் வெற்றிக்கு மறைமுகமாக உதவியது போல் ஆகிவிடும். இது, விஜய்க்கு அரசியலில் பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும்.
எனவே, தி.மு.க.,வை எதிர்ப்போர் ஓரணியில் நின்று களம் காண வேண்டியது அவசியம்.
மண், இனம், மொழி, மானம், ஈ.வெ.ரா., அண்ணாதுரை, சிறுபான்மையினர் பாதுகாப்பு, மத்திய அரசு வஞ்சிக்கிறது, மாநில சுயாட்சி போன்ற வார்த்தைகளை தி.மு.க., அடிக்கடி பேசினால், அக்கட்சி சிக்கலில் உள்ளது என்று அர்த்தம். அதிலிருந்து வெளியே வருவதற்கு தான் இத்தகைய அஸ்திரங்களை பிரயோகிப்பர்.
இம்முறையும் அவற்றை அடிக்கடி கூறி வருகின்றனர். அந்த அஸ்திரங்கள் தி.மு.க.,வை கரைசேர்க்குமா அல்லது அலைகளுக்குள் அகப்பட்ட துரும்பாக தத்தளிக்க வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
களங்கம் கற்பிக்க வேண்டாம்!
எம்.ஆர்.ஜெயச்சந்திரன், திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்: திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி, 'லாக்கப்' மரணத்திற்கு பின், 'காவல் துறை' என்ற சொல்லைக் கேட்டாலே அலர்ஜியாக உள்ளது.
இதில், 'காவல் துறை உங்கள் நண்பன்' என்ற வாசகம் வேறு!
அதுசரி... இப்போதெல்லாம் மது மயக்கத்தில் நண்பர்களை கொலை செய்யும் நிகழ்வுகளை பத்திரிகை செய்திகளில் படித்துக் கொண்டு தானே இருக்கிறோம். அதன்படி, காவல் துறை ஒரு கொலைகார நண்பர் என்றால் மிகப்பொருத்தமே!
இதுபோன்ற வீர சாகசத்தை, பாலியல் வழக்கில் கைது செய்யப்படுவோரிடமும், கஞ்சா, ஊழல் பேர்வழிகளிடமும் காட்டியிருந்தால், சற்று ஆறுதலாக இருந்திருக்கும்.
ஒரு சாதாரண திருட்டு வழக்கு... அதற்கு இவ்வளவு கடுமை காட்ட வேண்டுமா?
'காவல் துறை உங்கள் நண்பன்' என்ற சொல்லுக்கு இனியும் களங்கம் கற்பிக்க வேண்டாம்!
மேலும்
-
கடலில் மூழ்கிய இலங்கை படகு; சுற்றுலா பயணிகள் உயிர் தப்பிய திக்...திக்...காட்சி!
-
செஞ்சி கோட்டை பெருமைக்கு 348 ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளமிட்ட சத்ரபதி சிவாஜி
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைந்தது: கனடா பல்கலை, கல்லுாரிகளில் 10,000 பேர் வேலை இழப்பு
-
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கக்கூடாது; தேர்வாணைய தலைவர் தகவல்
-
தி.மு.க., சர்க்கார் சாரிம்மா மாடல் சர்க்காராக மாறி விட்டது; ஆர்ப்பாட்டத்தில் விஜய் ஆவேச பேச்சு!
-
டிரைவருக்கு மாரடைப்பு; அரசு பஸ் தாறுமாறாக சென்றதில் ஒருவர் பலி