விமானத்தில் கூட்டிச்சென்று பள்ளி மாணவர்களுக்கு 'பாடம்'

கோவை: கோவை, கண்ணார்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாள் விமானப் பயண திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு வாழ்க்கைத் திறன்களை வளர்க்கும் விதமாக அமைந்துள்ளது.


இந்த பயண திட்டமானது, இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ஞானசேகரன் தலைமையில், 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது.


இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து, விமானத்தில் பயணம் மேற்கொள்கின்றனர்.



மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, நான்கு குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவிலும் 25 மாணவர்கள், அவர்களின் பெற்றோரில் ஒருவர் மற்றும் 5 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.


கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணம் செய்து, அங்குள்ள பிர்லா
கோளரங்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம், விவேகானந்தர் இல்லம், மெரினா கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்களை பார்வையிடுகின்றனர்.


இது மாணவர்களுக்கு கல்வியை கடந்த அனுபவமாக அமைந்து, புதிய விசயங்களை நேரில் கண்டு கற்கும் வாய்ப்பாகவும் உள்ளது.


மாணவர் சஸ்வந்த், “முதல் முறையாக விமானத்தில் பயணித்தது மறக்கமுடியாத அனுபவம். அதுவும் என் தந்தையுடன் சென்றது, என்றும் நினைவில் இருக்கும்,” என்றார்.


மாணவி கவினயா, “எங்கள் குடும்ப சூழ்நிலையில், விமான பயணத்தை கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால் பத்தாம் வகுப்பில் படிக்கும் போதே அது சாத்தியமாகியது. இந்த மகிழ்ச்சி அனுபவத்தை மறக்கவே முடியாது,” என சிலிர்த்து பேசினார்.


இந்த பள்ளியில் படித்தால், விமானத்தில் அழைத்துச் செல்வார்கள் என்ற எண்ணம், மாணவர்களின் மனதில் பதிந்துவிட்டது. இதனால் பள்ளியில் சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளது. மாணவர்களும் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

- பிரேமா ஆசிரியை.


@block_B@

'ஒரு மாணவருக்கு ரூ.8 ஆயிரம்'

விமான பயணம் ஏற்பாடு செய்து வரும், சிக்காரம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் கூறியதாவது:அரசு பள்ளி மாணவர்களும், விமான பயண அனுபவத்தை பெற வேண்டும் என்ற எண்ணத்துடன், 2019ம் ஆண்டு, முதல்முறையாக மாணவர்களை விமான பயணத்துக்காக அழைத்துச் சென்றோம். அந்த அனுபவம் மாணவர்களுக்கு கற்றலில் நல்ல உந்துதலாகவும், கனவுகளை வளர்க்க தூண்டுவதாகவும் அமைந்தது.இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை விமான பயணத்துக்கு அழைத்து செல்லும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். ஒரு மாணவருக்கான பயண செலவு, ரூ.7,500 முதல் ரூ.8,000 வரை வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.block_B

Advertisement