எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அ.தி.மு.க., பற்றி நான் இழிவாக பேசவில்லை: வைகோ

1

திருச்சி : ''அ.தி.மு.க., பற்றியோ, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா பற்றியோ இழிவாக எந்த கருத்தையும் கூறவில்லை,'' என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.

திருச்சியில் அவர் அளித்த பேட்டி:

தி.மு.க., கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

பெரும்பான்மை



வரும் 2026 தேர்தலில், தி.மு.க., அறுதி பெரும்பான்மை பெறும்; கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும்.

கூட்டணி அரசு வேண்டும் என்று நான் விரும்பவில்லை. தமிழக மக்களும் கூட்டணி ஆட்சியை ஏற்க மாட்டார்கள்.

தமிழகத்தை சனாதன சக்திகள் கபளீகரம் செய்ய திட்டமிடுகின்றன. மோடி, அமித் ஷா மற்றும் பா.ஜ.,வினர் அதற்கு கடுமையாக முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சி மண்ணோடு மண்ணாகும். இந்திய அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட வேண்டிய நபர் அமித் ஷா. தி.மு.க., அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதை அமித் ஷா நிச்சயம் பார்ப்பார்.

அங்கீகாரம்



செய்தியாளர்கள் திரும்ப திரும்ப கேட்டதால், 'எட்டு இடங்களில் போட்டியிட்டால், கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும்' என்றுன் துரை வைகோ கூறினார்.

இத்தனை சீட் வேண்டும் என்று எந்த முடிவும் எடுக்கவில்லை. தொகுதி பங்கீடு பேச்சு நடக்கும் போது தான், எத்தனை சீட் என்பது பற்றி முடிவு செய்யப்படும்; தி.மு.க., கூட்டணியில் தொடரும் முடிவில் மாற்றம் இருக்காது.

'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது, அரசியல் பிழை' என்று மட்டுமே கூறினேன்.

அ.தி.மு.க., குறித்தோ, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா குறித்தோ இழிவான விமர்சனங்களை நான் கூறவில்லை. ஆனால், அ.தி.மு.க.,வினர் சிலர் என்னை கடுமையாக விமர்சிக்கின்றனர். அதை பற்றி நான் கவலைப்பட்டுப் பிரயோஜனமில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement