சாலை வசதி அமைத்து தரக்கோரிய கர்ப்பிணிக்கு 'ஷாக்' அளித்த எம்.பி.,

போபால்: மத்திய பிரதேசத்தில், 'மருத்துவமனைக்கு செல்லக்கூட தங்கள் கிராமத்தில் சாலை வசதி இல்லை' என தெரிவித்த கர்ப்பிணியிடம், 'உங்கள் பிரசவ தேதியை சொல்லுங்கள், முன்கூட்டியே மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்கிறேன்' என, பா.ஜ., - எம்.பி., கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சிதி மாவட்டத்தின் காதிகுர்த் பகுதியைச் சேர்ந்தவர் லீலா சாகு, 25.

சமூக வலைதளங்களில் தீவிர ஈடுபாட்டுடன் இருப்பவர். கடந்த ஓராண்டுக்கு முன் தங்கள் பகுதியில் உள்ள சாலையை மேம்படுத்தும்படி, சமூக வலைதளம் வாயிலாக பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த அத்தொகுதியின் பா.ஜ., - எம்.பி., ராஜேஷ் மிஸ்ரா, 'அடுத்த பருவமழைக்குள் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, குறிப்பிட்டார். எனினும், இதுவரை சாலை பணிகள் துவங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கிடையே, லீலா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அதே கோரிக்கையை சமூக வலைதளத்தில் மீண்டும் முன்வைத்தார்.

அதில், 'எங்களின் காதிகுர்த்தில் இருந்து கங்காரி பகுதிக்கு உரிய சாலை வசதி இல்லை; நான் உட்பட மொத்தம் ஆறு பேருக்கு பிரசவ தேதி நெருங்குகிறது. மருத்துவ வசதிகளை எளிதில் பெற, காதிகுர்த்தில் இருந்து கங்காரி பகுதி வரையிலான 10 கி.மீ., தொலைவு வரை சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அத்தொகுதி எம்.பி., ராஜேஷ் மிஸ்ராவிடம் எழுப்பிய கேள்விக்கு, ''சமூக வலைதளங்களின் வாயிலாக மக்களிடையே பிரபலம் அடையும் நோக்கில் இதுபோன்று கோரிக்கைகளை விடுப்பதன் அவசியம் என்ன? பா.ஜ., ஆட்சியில் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

''அவர்களின் பிரசவ தேதியை முன்கூட்டியே தெரிவித்தால், ஒரு வாரத்திற்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்கிறேன்,'' என்றார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய லீலா, ''என் பிரசவத்திற்கு பின் டில்லிக்கு சென்று, எங்கள் கிராமத்திற்கு உரிய சாலை வசதி அமைத்து தரும்படி, மத்திய அமைச்சர் கட்கரியை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன்,'' என்றார்.

எம்.பி.,யின் பொறுப்பற்ற பேச்சுக்கு,சமூக வலைதளத்தில் கண்டன குரல்கள் வலுத்துள்ளன.

Advertisement