மத்திய அரசின் 16வது வேலைவாய்ப்பு திருவிழா

மதுரை: மதுரை ரயில்வே மகாலில் மத்திய அரசின் 16வது வேலைவாய்ப்பு திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் 89 பயனாளிகளுக்கான மத்திய அரசு வேலைக்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்தியா முழுவதும் 47 இடங்களில் நடைபெற்ற இவ்விழாவினை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சியின் மூலம் துவக்கினார். பயனாளிகளில் 30 பேருக்கு ரயில்வே துறையில் பணி வழங்கப்பட்டது. இந்த 30 பேரில் 18 பேருக்கு மதுரை ரயில்வே கோட்டத்திலும், தலா ஆறு பேருக்கு திருச்சி, சேலம் கோட்டங்களிலும் பணி வழங்கப்பட்டன. 19 பேருக்கு இந்திய தபால் துறையிலும், 16 பேருக்கு இந்திய யூனியன் வங்கியிலும், 10 பேருக்கு இந்தியன் வங்கியிலும், 6 பேருக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிலும் பணி வழங்கப்பட்டது.

மேலும் 6 பேருக்கு மத்திய சுகாதாரத் துறையிலும், 3 பேருக்கு திருவாரூர் மத்திய பல்கலையிலும், ஒருவருக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவிலும் பணி வழங்கப்பட்டது.

இவ்விழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா, இந்திய யூனியன் வங்கி உதவி பொது மேலாளர் சபுமோன், தபால் துறை உதவி இயக்குநர் பொன்னையா, இந்திய -திபெத்திய எல்லை பாதுகாப்பு படை இணை கமிஷனர் நரேஷ் சந்திர பால் சிங், மத்திய பல்கலை பதிவாளர் திருமுருகன், இணை பதிவாளர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement