புது மனைவி, தாய் உட்பட மூவரை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கைது

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே குடித்துவிட்டு வந்ததை தட்டிக்கேட்ட தகராறில், புது மனைவி மற்றும் தட்டிகேட்ட தாய் மற்றும் உறவினரை துப்பாக்கியால் (ஏர்கன்) சுட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் தென்னரசன்,28: இவருக்கும், திண்டிவனத்தை சேர்ந்த லாவண்யா,26: என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.
தென்னரசன் தினமும் குடித்துவிட்டு வந்ததால் அதிர்ச்சி அடைந்த லாவண்யா தட்டிகேட்டதால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து லாவண்யா தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, நேற்று முன்தினம் அவர்கள் வந்து சமரசம் செய்துவிட்டு சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த தென்னரசன், லாவண்யாவின் பெற்றோர் சென்றதும் மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
மேலும், ஆத்திரம் தீராத தென்னரசன், நேற்று காலை 11:00 மணியளவில் குடித்து விட்டு வந்து, மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது, அவர் வைத்திருந்த ஏர் கன் துப்பாக்கியால் மனைவி லாவண்யாவை சுட்டார்.
இதனை தடுத்த தாய் பச்சையம்மாளை, 53; சுட்டார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டை சேர்ந்த தென்னரசனின் சித்தப்பா மகனும், சென்னை ஐகோர்ட் வழக்கறிஞருமான கார்த்திக் 28; என்பவரையும் சுட்டார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் தென்னரசனை பிடித்து மரத்தில் கட்டி வைத்து விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் தாய் பச்சையம்மாளுக்கு நெற்றி உள்ளிட்ட இரு இடங்களிலும், மனைவி
லாவண்யா, உறவினர் கார்த்திக் ஆகியோருக்கு தலையில் இரு இடங்களிலும் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த மூன்று பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் உறவினர் கார்த்திக் மற்றும் மனைவி லாவண்யா ஆகியோரது தலையில் குண்டு இரு இடங்களில் பாய்ந்துள்ளதால், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தகவலறிந்த விழுப்புரம் எஸ்.பி.,சரவணன், விக்கிரவாண்டி டி.எஸ்.பி., சரவணன், இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தென்னரசன் வீட்டில் இருந்து 4 ஏர் கன் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர் .
விக்கிரவாண்டி போலீசார் தென்னரசனை கைது செய்து அவரிடம் துப்பாக்கிகள் குறித்தும், கூலிப்படை தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தென்னரசன் வைத்திருந்த 4 துப்பாக்கிகளும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியது எனவும், இதற்கு லைசென்ஸ் தேவையில்லை எனவும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




மேலும்
-
கடலில் மூழ்கிய இலங்கை படகு; சுற்றுலா பயணிகள் உயிர் தப்பிய திக்...திக்...காட்சி!
-
செஞ்சி கோட்டை பெருமைக்கு 348 ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளமிட்ட சத்ரபதி சிவாஜி
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைந்தது: கனடா பல்கலை, கல்லுாரிகளில் 10,000 பேர் வேலை இழப்பு
-
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கக்கூடாது; தேர்வாணைய தலைவர் தகவல்
-
தி.மு.க., சர்க்கார் சாரிம்மா மாடல் சர்க்காராக மாறி விட்டது; ஆர்ப்பாட்டத்தில் விஜய் ஆவேச பேச்சு!
-
டிரைவருக்கு மாரடைப்பு; அரசு பஸ் தாறுமாறாக சென்றதில் ஒருவர் பலி