விவாகரத்து கேட்ட 8 ஜோடி லோக் அதாலத்தில் சமரசம்

தங்கவயல்:தங்கவயல் நீதிமன்றத்தில் நேற்று நடந்த தேசிய லோக் அதாலத்தில், விவாகரத்து வழக்கில் எட்டு ஜோடிகள் சேர்த்து வைக்கப்பட்டனர்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் தேசிய லோக் அதாலத், நேற்று தங்கவயல் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிவகுமார், ஜெயலட்சுமி, முசாபர் ஏ.மஞ்சரி, வினோத் குமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. நிலுவையில் உள்ள விவாகரத்து, ஜீவனாம்சம், வாகன விபத்து வழக்குகள், வங்கிகளில் வட்டி வசூல், மின் கட்டண பாக்கி, செக் மோசடி ஆகியவைகளில் தீர்வு காண்பதற்காக 2,579 வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டன. இதில் 2,497 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.

செக் மோசடி உட்பட பல்வேறு பணத் தகராறு வழக்குகளில், 1 கோடியே 71 லட்சத்து 79 ஆயிரத்து 321 ரூபாய்க்கு தீர்வு ஏற்பட்டதாக தங்கவயல் செஷன்ஸ் நீதிமன்ற முதன்மை நீதிபதி சிவகுமார் தெரிவித்தார்.

விவாகரத்து கோரிய வழக்குகளில் சேர்ந்து வாழ ஒப்புக் கொண்ட எட்டு ஜோடிகளுக்கு மாலை அணிவித்து சேர்த்து வைத்தனர். அவர்களுக்கு, நீதிபதி வினோத் குமார் அறிவுரை வழங்கினார்.

வக்கீல்கள் சங்கத் தலைவர் ராஜகோபால் கவுடா உட்பட பல வக்கீல்கள் பங்கேற்றனர்.

Advertisement