ஷராவதி பாலத்துக்கு எடியூரப்பா பெயர் வைக்க ஐகோர்ட்டில் மனு

பெங்களூரு: 'ஷிவமொக்கா மாவட்டம் ஷராவதி ஆற்றின் நீர்தேக்க பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்துக்கு, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பெயரை வைக்க வேண்டும்' என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஷிவமொக்கா மாவட்டம், ஷராவதி ஆற்றின் நீர்தேக்க பகுதியில், அம்பர்கோடு மற்றும் கலசாவள்ளி இடையே பாலம் இல்லாததால், படகுகள் மூலம் மக்கள் சென்று வந்தனர்.

இதையடுத்து, இங்கு பல கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டி முடிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இப்பாலத்துக்கு 'சிக்கந்துார் சவுடேஸ்வரி பாலம்' என பெயரிடப்படும் என்று பா.ஜ., - எம்.பி., ராகவேந்திரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஷிவமொக்காவை சேர்ந்த ஹரனத் ராவ், இப்பாலத்துக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பெயரை வைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி:

ஷராவதி ஆற்றில் பாலம் இல்லாமல், இவ்விரு பகுதி மக்களும், 60 - 70 ஆண்டுகள் சிரமத்துக்கு உள்ளாகினர். இங்கு வசிப்பவர்களுக்காக படகு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மாலை நேரத்தில் படகுகள் இயக்கப்படாததால், பொது மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் தொடர் முயற்சியால், இப்பகுதி மக்களின் கனவு நனவாக போகிறது. முடியும் தருவாயில் உள்ள மேம்பாலத்துக்கு எடியூரப்பாவின் பெயரை வைக்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தற்போதைக்கு யாருடைய பெயரையும் குறிப்பிட வேண்டாம் என்று மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது என்னுடைய விருப்பம் மட்டுமல்ல. ஷராவதி நீர்தேக்க பகுதியில் வசிக்கும் மக்களும் இதையே கூறுகின்றனர். நான் எடியூரப்பா சமூகத்தை சேர்ந்தவனோ அல்லது அவரது கட்சியை சேர்ந்தவனோ அல்ல. நானாக முன்வந்து, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். இப்பாலத்தால் குந்தாபூர் உட்பட பல இடங்களுக்கு செல்ல வசதியாக இருக்கும். மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாலும் கூட, 150 கி.மீ., துாரம் பயணிக்க வேண்டியிருந்தது. இனி அதுபோன்று நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement