இந்திய ராணுவம் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்: உல்பா பயங்கரவாதிகள் அலறல்

4

கவுகாத்தி: ''தங்கள் முகாம் மீது இந்திய ராணுவம் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது,'' என உல்பா(ulfa-i) பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், அப்படி தாக்குதல் நடந்ததாக தகவல் ஏதும் இல்லை என இந்திய ராணுவம் கூறியுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமை பிரித்து தனி நாடு கேட்டு பாரேஷ் பருவா தலைமையிலான உல்பா பயங்கரவாத அமைப்பினர் போராடி வருகின்றனர். அந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த அமைப்பினர், மியான்மர் எல்லைப் பகுதிகளில் பதுங்கி உள்ளனர்.


இந்நிலையில் இந்த அமைப்பினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள நாகலாந்தின் லோங்வா முதல், அருணாச்சல பிரதேசத்தின் பங்சாய் கணவாய் வரையில், எங்கள் முகாம் மீது இந்திய ராணுவம் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இன்று அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை 150க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ட்ரோன்கள் அனைத்தும் இஸ்ரேல் மற்றும் பிரான்சில் தயாரிக்கப்பட்டவை. இந்த தாக்குதலில், அமைப்பின் முக்கிய தளபதியாக விளங்கிய நயான் மெதி என்ற நயன் அசோம் உயிரிழந்தார். மேலும் 19 பேர் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலையிலும் இந்த தாக்குதல் தொடர்ந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவர், ட்ரோன் வீசி தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவத்திடம் எந்த தகவலும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். நாகாலாந்தில் உள்ள ராணுவ அதிகாரியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.

Advertisement