பொன்னேரி ரயில் நிலையத்தில் 'லிப்ட்' பழுது: பயணியர் தவிப்பு

பொன்னேரி:பொன்னேரி ரயில் நிலைய நடைமேடையில், 'லிப்ட்' பழுதாகி இருப்பதால், முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ள பொன்னேரி ரயில் நிலையத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன், முதல் நடைமேடையில் ஒன்று, இரண்டாவது நடைமேடையில் ஒன்று என, இரண்டு 'லிப்ட்'கள் அமைக்கப்பட்டன.

நடைமேடை படிக்கட்டுகள் வழியாக செல்ல முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. ஒரு மாதமாக 'லிப்ட்' பழுதாகி சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து பயணியர் கூறியதாவது:

சென்னை சென்ட்ரல் செல்வோர், முதல் நடைமேடையில் இருந்து, மூன்றாவது நடைமேடைக்கு செல்ல இந்த 'லிப்ட்'டை பயன்படுத்துவர்.

அதேபோல, சென்னையில் இருந்து பொன்னேரி வரும் புறநகர் ரயில்கள் அனைத்தும், இரண்டாவது நடைமேடையில் நிற்கும். அங்கிருந்து முதல் நடைமேடைக்கு வரும் பயணியரும், இந்த லிப்ட்டை பயன்படுத்துவர்.

தற்போது, லிப்ட் பழுதாகி இருப்பதால், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆபத்தான முறையில் தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர். இதனால், அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. பழுது குறித்து எந்தவொரு அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை.

பயணியர் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றம் அடைகின்றனர். எனவே, பழுதாகி இருக்கும் லிப்ட்டை சீரமைக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement