தேர்வாய்கண்டிகை சிப்காட் சாலை வளைவில் நிறுத்தும் ஆட்டோக்களால் விபத்து அபாயம்

ஊத்துக்கோட்டை:தேர்வாய்கண்டிகை சிப்காட் செல்லும் சாலை வளைவில், ஆட்டோக்கள் வரிசை கட்டி நிற்பதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், சூளைமேனியில் இருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகம் அமைந்துள்ளது. இந்த சிப்காட் வளாகம், கடந்த 2019ம் ஆண்டு, 1,127 ஏக்கர் பரப்பளவில் துவக்கப்பட்டது. தற்போது, 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்த தொழிற்பூங்காவிற்கு, தினமும் 500க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதற்காக, இப்பகுதியில் தரமான சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து, மூலப்பொருட்களை எடுத்து வரும் கனரக வாகனங்கள், சூளைமேனி கிராம சாலை வளைவில் சென்று, தேர்வாய்கண்டிகை செல்ல வேண்டும்.

இந்த வளைவில், தொழிற்சாலைக்கு செல்லும் பணியாளர்களை ஏற்றிச் செல்வதற்காக, ஆட்டோக்கள் வரிசை கட்டி நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், இப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், விபத்து ஏற்பட்டால் உயிர்ச்சேதம் ஏற்படுவதுடன், பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, தேர்வாய் கண்டிகை சிப்காட் செல்லும் சாலை வளைவில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களை மாற்று இடத்தில் நிறுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement