ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் போராட்டம்

3

மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.


மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று நள்ளிரவு 1.40 மணிக்கு, ஸ்பைஸ்ஜெட் விமானம் துபாய்க்கு செல்ல இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, திட்டமிட்டபடி விமானம் புறப்படவில்லை.


கோளாறு சரிசெய்யப்பட்டதும் விமானம் புறப்படும் என்று பயணிகளுக்கு ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் கூறினர். ஆனால், எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும், மீண்டும் விமானம் எப்போது புறப்படும் என்பது குறித்து எந்த தகவலையும் சொல்லவில்லை.


சுமார் 10 மணிநேரத்திற்கும் மேலாக பயணிகள் காத்திருந்தனர். மேலும், பயணிகளுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.


இதனால், கோபமடைந்த பயணிகள், விமான நிலைய முனையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

Advertisement